நெல்லை: பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்வியியல் கல்லூரியில் நூலகத் துறையின் நிலையான வளர்ச்சியில் நவீன யுத்திகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கி நடந்து வருகிறது. இதன் தொடக்க விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கருத்தரங்கு விழா மலரையும் வெளியிட்டார். அப்போது அவர், கல்வித்துறையில் நூலகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று பெயர் பெற்றுள்ளது என்றால், இங்கு ஏராளமான கல்வி நிறுவனங்களை நிறுவி கல்வியை வழங்கியதால் தான்.
ஒரு காலத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் சார்ந்தவர்கள்தான் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையை மாற்றி அனைவருக்கும் சமமான கல்வி வழங்கி 200 ஆண்டுகளுக்கு முன் சமூக நீதிக்கு வித்திட்டவர்கள் இயேசு சபைதான். இங்குள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் 88 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் கல்வி பயின்று பயன் பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் உள்ளன.
கல்வித்துறை மீது மிகுந்த அக்கறை கொண்டவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதனால் தான் மதுரையில் நவீன வசதியுடன் நவீன முறையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. அதுபோன்று நெல்லையிலும் கலைஞர் நூலகம் அமைக்க வேண்டும் அதுவும் பொருநை அருங்காட்சியகம் அமையும் பகுதிக்கு அருகில் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன்.
அந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும். 1972ஆம் ஆண்டு நூலகத்துறைக்கு தனி இயக்குநர் தந்தவர் கலைஞர். அதோடு மட்டும் அல்லாமல் 12,525 ஊராட்சிகளிலும் பகுதி நேர நூலகங்கள் அமைக்கவும் உத்தரவிட்டார். தற்போதைய முதலமைச்சரும் புதுமைப் பெண் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என்று கல்வித்துறைக்கு ஏராளமான திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒன்று தாய்மொழி தமிழ் மற்றொன்று ஆங்கிலம். இரு மொழிக் கொள்கையை அண்ணா, பெரியார், காமராஜர், கருணாநிதி உள்ளிட்டோர் போராடி கொண்டு வந்தனர். இருமொழிக் கொள்கையால் தான் தமிழர்கள் உலகெங்கும் சென்று பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:Erode East By Poll: ஈரோடு கிழக்கு வேட்பாளர்கள் யார்? ஓபிஎஸ், இபிஎஸ் கணக்கு என்ன?