திருநெல்வேலி: பணகுடி அடுத்த யாதவர் மேல தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (75). இவர் திருமண தரகராக வேலை செய்துவருகிறார். இவரிடம் கடந்த ஜனவரி 21 அன்று, மூன்று நபர்கள், நண்பருக்கு பெண் பார்க்க வேண்டும் என கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது கந்தசாமி அணிந்திருந்த 23 பவுன் தங்க நகைகளை பறித்துவிட்டு, அவரை அக்கும்பல் காரில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தரகர் கந்தசாமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
7 மாதம் தலைமறைவு
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெண் காவல் ஆய்வாளர் சகாய சாந்தி, குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தார். குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி போன்ற அண்டை மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இருப்பினும் கடந்த 7 மாதங்களாக இந்த வழக்கில் குற்றவாளிகள் சிக்கவில்லை. கந்தசாமி காட்டிய அடையாளங்களை வைத்து, அவரிடம் நகை பறித்த கும்பல் வள்ளியூரை சேர்ந்த எல்கான்தாசன்(28), பணகுடியைச் சேர்ந்த சபரிவளன்(20) பாம்பன் குளத்தைச் சேர்ந்த ஸ்டாலின்(40) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மூன்று பெயரையும் பெண் காவல் ஆய்வாளர் சகாய சாந்தி தீவிரமாக கண்காணித்து வந்தார். ஆனால் காவலர்கள் தேடுவதை அறிந்த குற்றவாளிகள் வெளியூரில் சென்று தலைமறைவாகினர்.
பிடிபட்ட குற்றவாளி - பாராட்டு பெற்ற ஆய்வாளர்
இந்நிலையில் மூன்று பேரும் சென்னையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சகாய சாந்தி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர், சென்னைக்கு சென்றனர். பின்னர் சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே பதுங்கியிருந்த குற்றவாளிகளை சுற்றி வளைத்து கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து அவர்களிடமிருந்து 18 பவுன் தங்க நகைகள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், இம்மூவரும் சுக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியதாகவும், அந்த சமயம் அதிக நகையுடன் வலம் வந்த கந்தசாமியை குறிவைத்ததாகவும் தெரியவந்தது.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த பெண் காவல் ஆய்வாளர் சகாய சாந்தியை, அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஐ.ஏ.எஸ். அலுவலரின் கணவரிடம் கைவசம் காட்டிய கொள்ளையர்கள்