திருநெல்வேலி: இந்தியாவில் இஸ்ரோவின் முதல் முயற்சியான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ‘ககன்யான்’ என்ற திட்டத்தில், இன்று (ஆகஸ்ட் 9) நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்து உள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாகத்தில் 2 E ககன்யான் ப்ரோ மாடல் இன்ஜின் (pro model engine) சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 670 விநாடிகள் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
அதேநேரம், ககன்யான் திட்டத்தில் பல சோதனைகள் கண்ட போதிலும், இன்றைய சோதனை மிக முக்கிய சோதனை எனவும், எனவே இந்த வெற்றி இந்திய விண்வெளித் துறையின் முக்கிய மைல் கல்லாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. மேலும், வருகிற 2024 டிசம்பர் மாதத்தில், இந்தியாவில் இருந்து முதல் முறையாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் சோதனை நடத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கூறியிருந்தார்.
முன்னதாக, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (Mahendragiri Space Research Centre) உள்ள உந்தும வளாகத்தில் 603 விநாடிகள் நடைபெற்ற சோதனையில் கிரையோஜெனிக் இன்ஜினின் (Cryogenic Engine of Gaganyaan Project) பல்வேறு காரணிகள் சோதனை செய்யப்பட்டன. இந்தச் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
மேலும், தூத்துக்குடியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு நிகழ்வில் இஸ்ரோ இயக்குநர் சுதீர் குமார் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனைப் பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும்'' எனக் கூறி இருந்தார்.
அதேநேரம், கடந்த 2006ஆம் ஆண்டு ககன்யான் திட்டத்திற்கான முதல் விதை போடப்பட்ட நிலையில், 2021 டிசம்பரில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி, 75வது சுதந்திர தினத்திற்கு முன்னதாக இந்தத் திட்டத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி கூறி இருந்தார்.
ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக நிதிப் பற்றாக்குறை மற்றும் வன்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. இதனால், இந்த திட்டம் குறிப்பிட்ட நாளில் செயல்படுத்த முடியாமல் போனது. மேலும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே இதுவரை விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், உலகிலேயே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 4ஆவது நாடாக இந்தியா விரைவில் இடம்பெற உள்ளது. அது மட்டுமல்லாமல், ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடை உள்ள விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிலவை நெருங்கும் சந்திரயான் 3 விண்கலம்... இஸ்ரோ கொடுத்த நல்ல சேதி!