திருநெல்வேலி: திமுகவின் கட்சிப் பொறுப்புகளுக்கு தற்போது உள்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. திமுகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் உள்பட்ட பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பதவிக்கு இரண்டு பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் ஒருவரின் மனுவை தள்ளுபடி செய்து மற்றொருவரை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்க திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட காளி என்பவர் திமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு முறையாக தேர்தல் நடத்தி செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் கட்சி அலுவலகத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமுக கட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் கட்சித் தலைமையிடம் சென்று முறையிட வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்ட காளியிடம் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்றார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உள்கட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்றும் தனக்கு உரிய நியாயம் கிடைக்காத காரணத்தால் தலைமையிடம் சென்று முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அதிரடி காட்டிய நெல்லை மாநகராட்சி ஆணையர்!