திருநெல்வேலி: தேசிய மருத்துவர் தினம் இன்று (ஜூலை 1) கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மருத்துவர் தினத்தை முன்னிட்டு நெல்லையைச் சேர்ந்த வேல்ஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகத்தினர் வித்தியாசமான முறையில் தங்கள் பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவர் போல் வேடம் அணிந்து நேற்று (ஜூன் 30) நெல்லை ஆட்சியரை சந்திக்க அழைத்து வந்தனர்.
வெள்ளை கோட் அணிந்தபடி கழுத்தில் ஸ்டெதஸ்கோப், தலையில் அறுவை சிகிச்சை அறையில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உறை என அசல் மருத்துவர்களை போன்று வேடமிட்டு மழலை நடையில் குழந்தைகள் ஆட்சியரை சந்திக்க ஆர்வமுடன் ஆட்சியர் அறை முன்பு காத்திருந்தனர்.
ஆனால் குழந்தைகளின் துரதிஷ்டவசமாக ஆட்சியர் கார்த்திகேயன் காலை முதல் முக்கியமான கூட்டத்தில் பங்கேற்றதால் அவரால் குழந்தைகளை சந்திக்க முடியவில்லை. வழக்கமாக இது போன்று ஆட்சியரை சந்திக்க வருவதாக இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் உரிய அனுமதி பெற்று தான் வருவார்கள்.
ஆனால் இம்மறை ஆட்சியரிடம் இது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுமார் ஒரு மணி நேரமாக தன்னை குழந்தைகள் சந்திக்க வந்திருக்கும் விஷயத்தை ஆட்சியர் கார்த்திகேயன் தெரிந்து கொள்ளாமல் இருந்தார். பின்னர் நீண்ட நேரமாக குழந்தைகள் காத்திருப்பதை கண்டு அலுவலர்கள் சிலர் ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனாலும் கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டு செல்ல ஆட்சியர் விரும்பவில்லை. இதனால் சுமார் 2 மணி நேரமாக ஆட்சியரை சந்திக்க காத்திருந்த குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் மழலைகளின் மனம் வாடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் ஆட்சியர் அறையின் அருகில் இருந்த பயிற்சி உதவி ஆட்சியர் கோகுல் குழந்தைகளை தனது அறைக்கு அழைத்தார். மாற்றுத்திறனாளி ஆட்சியரான கோகுலுக்கு கண் பார்வை கிடையாது. அவர் மிகவும் பரிவோடு குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் குழந்தைகள் மருத்துவர் வேடமிட்டு வந்திருப்பதை அறிந்த பயிற்சி ஆட்சியர் கோகுல் அவர்களை பாராட்டினார். பார்வைத் திறன் இல்லை என்பது குறைபாடே அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சாதித்து காட்டியிருக்கும் உதவி ஆட்சியர் கோகுலை சந்தித்தது குழந்தைகளுக்கு உள்ளபடியே உத்வேகத்தை அளிக்கும் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கோகுல் 2021ல் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சியடைந்து தமது பணிக்காக தமிழ்நாட்டை தேர்வு செய்தார். கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் முதல் திருநெல்வேலி உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.