நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் ஆதரமாகவும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாகவும் விளங்கிவரும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதி, பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி சுமார் 125 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலில் கடலில் கலக்கிறது.
அதிக மூலிகைக் குணம் கொண்ட தாமிரபரணி நதி கடந்த பல ஆண்டுகளாக கழிவுநீர் உள்ளிட்டவைகள் கலந்து மாசு படிந்து காணப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாள்களாக தாமிரபரணி நதியின் நிறம் மாறி சிவப்பு நிறத்தில் வருகிறது. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை, பாபநாசம் முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் தாமிரபரணி நீர் குடிதண்ணீர் தேவைக்காக ஆற்றின் பல்வேறு இடங்களில் நீரேற்று நிலையங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்டப் பகுதிகளில் பொதுமக்கள் குடிதண்ணீர் நிறம் மாறி வருவது குறித்து, ஏற்கெனவே நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து பொதுப்பணித்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், பாபநாசம் அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். மேலும் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் டனல் மூலம் சேர்வலாறு சென்று வரும்போது, சுத்திகரிக்கப்பட்டு வரும்.
ஆனால், தற்போது அணையில் குறைவான நீர் இருப்பதால், தண்ணீர் நிறம் மாறி உள்ளது. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் தாமிரபரணி தண்ணீர் நிறம் மாறி வருவது குறித்து நான்கு வாரங்களில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், பொதுப்பணித்துறை பொறியாளர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க... சிவப்பு நிறமாகப் பாய்ந்து வரும் தாமிரபரணி நதி - பொதுமக்கள் அச்சம்!