தமிழ்நாட்டில் தொடர்ந்து 17ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே இன்று (23-06-2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய சங்க நிர்வாகிகள், "கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இப்படியே சென்றால் பொதுமக்கள் மீண்டும் பழையபடி மாட்டு வண்டியில் தான் நகர் பகுதிகளுக்கு பயணிக்க வேண்டியிருக்கும்.
எனவே அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு 15,000 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். ஆந்திரா, கேரளா மாநிலங்களில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அதே போன்று தமிழ்நாட்டிலும் கடன் வழங்க வேண்டும்.
ஆட்டோக்களுக்கு எப்.சி, இன்சூரன்ஸ் புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் வழங்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை போராட்டத்தில் முன் வைத்தனர்.
பின்னர் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் ஆட்டோவைக் கயிறுகட்டி இழுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க : ஏற்றுமதியில்லை... சீசனில் போதிய விற்பனையும் இல்லை: நெருக்கடியில் உழலும் மண்பாண்ட தொழிலாளர்கள்!