தமிழ்நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் 12ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகையன்றும் தொடர்ச்சியாக மழை பெய்தது.
இந்நிலையில், இன்று ஐந்தாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 16) காலை முதல் மாநகர் பகுதிகளான ஜங்ஷன் பேட்டை, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, பெருமாள்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நகரின் பல பகுதிகளில் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். குடிநீர் திட்டப் பணிகளுக்காக மாநகரில் பல்வேறு இடங்களில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாததால், தற்போது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அபாயகரமாக காட்சியளிக்கிறது.
இதற்கிடையில் திருநெல்வேலி முருகன் குறிச்சி பகுதியில் தொடர் மழையால் சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று முறிந்து சாலையில் சென்ற கார் மீது விழுந்தது, நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அறுத்து காரை மீட்டனர்.
மாவட்டத்தின் பிற பகுதிகளான சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாபநாசம், நாங்குநேரி, வள்ளியூர் என அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் இதுவரை 80 செமீ மழை பதிவாகியுள்ளது.