திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நெல்லையில் நடைபெற்றது.
இதில், அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியதாவது, ‘தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கிடவும், புதிய உறுப்பினர்களை சேர்த்து கடன் வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், 2 ஆயிரம் டன்னுக்கு மேல் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக விளைப் பொருள்கள், உரம் போன்றவை கையிருப்புள்ளன” எனத் தெரிவித்தார். தொடரந்து பேசிய அவர், “நியாய விலை கடைகள் மூலம் முதல் தவணையாக கரோனா நிவாரணத்தொகை 2000 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது.
தொடரந்து, நியாய விலை கடைகளில் தரமான அரிசி வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. குழு கடன்கள் மட்டுமல்லாமல் தனி விவசாயிகளுக்கும் கடன்கள் வழங்க கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகளவில் அமைப்பதற்கு அனைத்து இடங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படும். வறுமையிலுள்ள பொதுமக்கள் வைத்துள்ள சீனி குடும்ப அட்டைகளை, அரிசி அட்டைகளாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. வெற்றிலை விவசாயிகளுக்கும் விவசாய பயிர்கடன் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: ‘மின்வெட்டுக்கு காரணம் அதிமுக ஆட்சிதான்’- அமைச்சர் செந்தில் பாலாஜி!