நெல்லை அருகே மானூர் ரஸ்தாவைச் சேர்ந்தவர் மீசை முருகேச பாண்டியன். நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். கடந்த ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் செல்லும் அரசுப்பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
பேருந்து சாத்தான்குளம் முன்பாக கருங்கடல் வந்தபோது, திடீரென மீசை முருகேச பாண்டியனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனாலும், பேருந்தில் இருந்த சுமார் 50 பயணிகள் ஒவ்வொருத்தரும் தேவைக்காக அவசரமாக செல்வார்கள் என்பதால் சாத்தான்குளத்தில் அவர்களை இறக்கிவிட்டு, பிறகு நெஞ்சு வலியை பரிசோதித்துக் கொள்ளலாம் என்று எண்ணியுள்ளார்.
பின்னர், நெஞ்சு வலியோடு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சுமார் 10 கி.மீ தூரம் சாத்தான்குளம் சென்று அங்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, அதன் பிறகே ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குச் சென்றார். ஆனால், சிகிச்சைப் பலனளிக்காமல் ஓட்டுநர் மீசை முருகேச பாண்டியன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தன் உயிரையும் துச்சமென கருதி, பயணிகளை பத்திரமாக அவர்கள் சேர வேண்டிய இடத்தில் சேர்த்து விட்டு உயிர் நீத்த ஓட்டுநர் மீசை முருகேச பாண்டியனை கெளரவிக்கும் விதமாக நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று(ஜன.26) நடைபெற்ற குடியரசு தின விழாவில் அவரது மனைவி வேலம்மாளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பாராட்டு சான்று வழங்கினார். இந்நிகழ்வில் அவரது சகோதர்கள் வெள்ளப் பாண்டியன், அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து, வேலம்மாள் முருகேச பாண்டியன் கூறும்போது, '50 பயணிகளைக் காப்பாற்றி விட்டு அவர் இறந்து விட்டார். தற்போது, அவரது பென்சன் பணம் வருகிறது. ஆனால் சர்வீஸ் பணம் இன்னும் வரவில்லை. எனவே விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:சிறப்பு விருந்தினராக மாணவியை அழைத்து தேசியக்கொடி ஏற்றிய பள்ளி நிர்வாகம்