திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெஜி. இவர் நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று (நவ.15) வழக்கம்போல் பாபநாசத்தில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற பேருந்தை ரெஜி ஓட்டி சென்றுள்ளார்.
இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே சென்றபோது திடீரென பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் நடுரோட்டில் பேருந்தை வழிமறித்துள்ளனர். பின்னர் பைக்கில் இருந்து இரண்டு நபர்கள் பேருந்தில் ஏறியுள்ளனர். அதற்கு ஓட்டுநர் ரெஜி மற்றும் நடத்துநர் கண்ணன் இருவரும், "நடுரோட்டில் இப்படி ஆபத்தான முறையில் பஸ்சை வழிமறிக்கலாமா?" என அவர்களிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
எனவே, அந்த இரண்டு நபர்களும் ஓட்டுநரிடம் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தன்னை பைக்கில் அழைத்து வந்த மற்றொரு மர்ம நபரிடம் ஓட்டுநர் தகராறு செய்வதாக செல்போனில் கூறியுள்ளனர். இதையடுத்து பைக் ஒட்டி வந்த மர்ம நபர் பேருந்தை பின் தொடர்ந்து வந்துள்ளார். பேருந்து வீரவநல்லூர் பேருந்து நிலையத்தில் நின்றபோது, மர்ம நபர் கையில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு ஆக்ரோஷத்துடன் ஓட்டுநர் ரெஜியின் முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்த தாக்குதலில் ஓட்டுநர் ரெஜியின் முகத்தில் ஆழமான வெட்டு விழுந்துள்ளது. இதைக் கண்டு தடுக்க சென்ற நடத்துநர் கண்ணனுக்கும் லேசான வெட்டு விழுந்துள்ளது. இதனை அடுத்து ஓட்டுநர் ரெஜி ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பணியில் இருந்த அரசு பேருந்து ஓட்டுநரை மர்ம நபர்கள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்து இன்று (நவ.16) இன்று அதிகாலை முதல் பாபநாசம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளை இயக்காமல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சுமார் 5 மணி நேரமாக நீடித்த போராட்டத்தால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதை அடுத்து அங்கு வந்த துணை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உரியப் பணி பாதுகாப்பு வேண்டும். தாக்கப்பட்ட ஓட்டுநர் ரெஜிக்கு உரியச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். இதனை அடுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பேருந்துகளை இயக்கினர்.முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டுநர் ரெஜி பூரண குணமடைய வேண்டி ஊழியர்கள் அனைவரும் பணிமனையில் மண்டியிட்டு வழிபட்டனர். இதற்கிடையில் பேருந்து நிலையம் அருகில் வைத்து மர்ம நபர் கையில் அரிவாளுடன் ஓட்டுநர் ரெஜியை வெட்டச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லை சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கொலை வழக்கு - 4 பேர் ஒட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் சரண்!