திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர்கள் குழு தெரிவித்தது. இந்நிலையில் சேதங்கள் கணக்கெடுப்பில் அலட்சியம் காட்டுவதாக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதாவது திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் இன்று (ஜன.19) மழை பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருநெல்வேலியில் மழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி தாலுகாவில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் நெல்பயிர்கள், ஒரு லட்சம் வாழைகள் சேதம் அடைந்துள்ளன.
இது குறித்து அலுவலர்களிடம் முறையிட்டோம். ஆனால் அவர்கள் பல இடங்களில் ஆய்வு செய்யவில்லை, நிவாரணம் வழங்கக்கூடிய முயற்சியிலும் ஈடுபடவில்லை. குடிநீர் வழங்கும் கிணறுகளும் வெள்ளத்தில் மூடப்பட்டுள்ளதால் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நெல்பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய், வாழைக்கு ஒரு ஏக்கருக்கு 70 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். நாளை மறுநாள் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எங்கள் கட்சி தலைமையிடம் இந்த பிரச்னையை கொண்டு சேர்ப்போம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விலகியது வட கிழக்கு பருவ மழை