திருநெல்வேலி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் இருந்து வந்த அரிக்கொம்பன் காட்டு யானை தமிழக வனப்பகுதி வழியாக தேனி மாவட்டம் கம்பம் நகரத்துக்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து அங்கு அரிக்கொம்பன் பால்ராஜ் என்பவரை தாக்கி அவர் உயிரிழந்தார். அதை எடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த யானையை பிடித்தனர். பிடிக்கப்பட்ட அரிக் கொம்பன் யானையை சமீபத்தில் நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோதையாறு அணைப் பகுதியில் உள்ள குட்டியார் என்ற இடத்தில் ஆறு மணிக்கு விடப்பட்டது.
பலத்த பாதுகாப்போடு வனத்துறை குழுவினர் அந்த யானையை அழைத்து சென்று வனப்பகுதியில் விட்டனர். அதனைத் தொடர்ந்து யானை கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் வனத்துறை கண்காணித்து வருவதாக கூறப்பட்டது. மேலும் யானை நடமாட்டத்தை கண்காணிக்க கோதையாறு வனப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. யானை விடப்பட்டுள்ள குட்டியார் வனப்பகுதி மாவட்ட ரீதியாக கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் வருகிறது.
அதே சமயம் வன ரீதியாக அது நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும். இதற்கிடையில் யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி செயல்படவில்லை எனவும் எனவே யானை வனத்துறையின் பார்வையில் இருந்து விலகி தூரத்தில் சென்றதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதே சமயம் வனத்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் அரிக்கொம்பன் யானையின் நிலை குறித்து அப்டேட் கொடுத்து வந்தார்.
குறிப்பாக முதன்முதலில் அவர் தான் யானை குட்டியார் அணை பகுதியில் தண்ணீர் அருந்துவது, புற்களை தண்ணீரில் யானை கழுவி சாப்பிடும் காட்சிகளையும் வீடியோவாக பதிவிட்டு இருந்தார். அந்த வகையில் நேற்று அவர் அரிக்கொம்பன் யானை குட்டியார் அருகே வனப்பகுதியில் குழந்தையை போன்று படுத்து உறங்குவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் யானை இயற்கை எழில் கொஞ்சும் புல் தரையில் தூங்குவது போன்ற காட்சிகள் இருந்தது.
அதே சமயம் திடீரென சுப்ரியா சாகு பதிவிட்டு இருந்த அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து தூக்கியதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் காட்டு யானை அரிக்கொம்பனின் தற்போதைய நிலை குறித்து வனத்துறையினர் விளக்கம் அளித்து உள்ளனர்.
இதுக் குறித்து தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தி குறிப்பில் “தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேல் வனக்கோட்ட கோதையாரில் உள்ள குட்டியார் அணைப்பகுதியில் விடப்பட்டது. அரிக்கொம்பன் யானையானது தற்பொழுது நல்ல உடல்நலத்துடன் சீரான உணவு மற்றும் நீர் எடுத்துக் கொள்கிறது.
யானையின் நடமாட்டத்தினை களக்காடு அம்பாசமுத்திரம் மற்றும் கன்னியாகுமரி பணியாளர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். ஜீன் 6 ஆம் தேதி முதல் வன உயர் அதிகாரிகள், கால்நடை மருத்துவக்குழு, முன் களப் பணியாளர்கள் உள்ளடக்கிய மொத்தம் 6 குழுக்கள் மற்றும் ரேடியோ காலர் தொழில்நுட்பம் மூலம் யானையின் நடமாட்டம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை சார்பாக யானைக்கும், பொது மக்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு - கேரள எல்லையில் உலா வரும் அரிக்கொம்பன்: குமரி ஆட்சியர் தகவல்!