திருநெல்வேலி: தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மிதவை மூலம் ஜெனரேட்டரை ஏற்றி வந்த போது, இழுவை கப்பலின் கயிறு அறுந்ததால் மிதவை பாறையில் தட்டி நின்றது. 600 டன் எடை கொண்ட நீராவி உற்பத்தி செய்யும் இரண்டு இயந்திரங்களை (ஸ்டீம் ஜெனரேட்டர்) ஏற்றி வந்த மிதவை கப்பல், பாறை இடுக்குகளில் சிக்கியதால் அதனை இழுத்து வந்த இழுவை கப்பலின் கயிறு அறுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தின் ரஷ்யாவின் உதவியுடன் அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகளில் மின் உற்பத்தி நடந்து வரும் நிலையில், மேலும் நான்கு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதில் இரண்டு உலைகளுக்குத் தேவையான ஜெனரேட்டர்கள் ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் கொண்டு வரப்பட்டு இருந்தது. பின்னர் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மிதவையில் சுமார் 600 டன் எடை கொண்ட ஜெனரேட்டர்கள் ஏற்றப்பட்டு, இழுவை கப்பல் மூலம் கூடங்குளம் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டன.
அப்போது மிதவையை இழுவைக் கப்பலுடன் இணைத்து இருந்த கயிறு அறுந்ததால் மிதவை பாறையில் தட்டி நின்றது. மேலும், பாறையில் மிதவை தட்டியதால் தான் கயிறு அறுந்ததாகவும் கூறப்படுகிறது. ஜெனரேட்டர்களை ஏற்றி வந்த மிதவையை இழுத்து வந்த இழுவைக் கப்பல், ஆனது 55 மீட்டர் நீளமும் 18 மீட்டர் அகலமும் கொண்டது.
இடிந்தகரை கடற்பகுதியில் உள்ள பாறைகளில் சிக்கி உள்ள மிதவையின் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் உள்ளது. மிதவையினை மீட்கும் பணியில் ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளி வீரர்களும், அப்பகுதியில் உள்ள மீனவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணுமின் நிலையத்தின் சிறிய துறைமுக பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள பாறையில் மிதவை சிக்கி உள்ளது. கடலின் நீர்மட்டத்தின் உயர்வு மற்றும் காற்றின் வேகத்தை பொறுத்து மிதவை மீட்கப்பட்டு மீண்டும் அது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அந்த சிறிய துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு சுமார் 7 மணி அளவில் கடலின் நீர்மட்டம் குறைந்த பின்பு மிதவை மீட்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே உக்ரைன் - ரஷ்ய போரினால் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு உதிரி பாகங்கள் கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கொண்டு வரப்பட்ட இயந்திரங்களையும் அணு உலைக்கு கொண்டு செல்ல முடியாமல் கடலில் பாறையில் தட்டி நிற்பது அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.