நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள வரகனூர் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கிவருகிறது. இந்த ஆலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏழு பேர் பலியாகினர். அதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பட்டாசு ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் இன்று அந்தப் பட்டாசு ஆலை அருகே உள்ள முட்புதர்களை வெட்டி ஒதுக்கும் பணி நடைபெற்றுவந்தது.
முட்புதர்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மதிய உணவிற்காக சமையல் செய்தபோது, அதிலிருந்து வந்த தீப்பொறி பட்டாசு ஆலையில் வைக்கப்பட்டிருந்த வெடிகள் மீது பட்டு அங்கிருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. இதில் சிக்கி, மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபால் (61), கனகராஜ் (46), அர்ஜூன் (17), குருசாமி (62), காமராஜ் (58) ஆகிய ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். வெடி விபத்தினைக் கண்ட அருகிலிருந்த மக்கள் தீயணைப்பு, காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டையைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் காவல் துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிவகாசிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவேங்கடம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.