திருநெல்வேலி: சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்த தின விழா இன்று மாநிலம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்திருக்கும் வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்திய சுதந்திரப் போராட்ட வீர வரலாற்றில் மறைக்க முடியாத, மறக்க முடியாத ஒரு பெயராக திகழ்ந்தது வ.உ.சி., அவரது 150ஆவது பிறந்தநாளில் பல்வேறு சிறப்புகளை தமிழக முதலமைச்சர் செய்தார். நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள மணிமண்டபத்தை சிறப்புற அழகு செய்ய 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மணிமண்டபத்தை மேம்படுத்திடும் வகையிலும், இளைஞர்களுக்கு உந்து சக்தியாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் பகுதிகளாக மணிபண்டபங்கள் திகழ வேண்டும் என்பதற்காக, போட்டி தேர்வில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் சிறப்பு செய்துள்ளார்.
எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் விடுதலைப் போராட்ட வீரர்களையும் அவர்களது தியாகங்களையும் போற்றி பாராட்டும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. எங்களுக்கெல்லாம் ஆசிரியராக நான் பார்த்தவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, அவரிடம் பாடம் பெற்ற மாணவர்களாக அத்தனை பேரும் நாங்கள் இங்கு உள்ளோம்.
அவர் சொன்னதைப் போல் காலப் பேழையில் கவிதை சாரலும் என்பதைப் போல் அவர் தனக்காக இல்லாமல் பிறருக்காக தமிழ் சமுதாயத்திற்காக ஆசிரியராக திகழ்ந்தவர். எத்தனையோ பேரை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆசிரியரை பற்றியும் ஒவ்வொருவருக்கு நல்ல நினைவுகள் பல உண்டு இந்த தருணத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து சனாதானம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் கூறாமல் சிரித்து கொண்டே அங்கிருந்து நழுவிச் சென்றார். பின்னர் நெல்லை மாநகராட்சி டவுன் வர்த்தக மையத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 204 ஊராட்சிகளில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 20 கிராம ஊராட்சிகளுக்கு 94 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 20 வாகனங்களை, கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக வழங்கி வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.