தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடை அடைப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், கோவில்பட்டி கிளைச் சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக நேற்று திருநெல்வேலி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறைக்கு எடுத்துவரப்பட்டது. ஆனால், சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உடற்கூறு ஆய்வு நடத்த குடும்பத்தினர் அனுமதி அளிக்காமல் இருந்தனர்.
இந்த விவகாரத்தில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் வீடியோ பதிவுடன் உடற்கூறாய்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் கோவில்பட்டி நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் இன்று உறவினரிடம் விசாரணை நடத்துவதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். உறவினர்கள் தரப்பில் உயிரிழந்தவரின் மனைவி செல்வராணி, மகள் பெர்ஸி ஆகியோர் வந்திருந்தனர்.
நீதிபதி பாரதிதாசன் குடும்பத்தினரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார். அப்போது ”எனது தந்தையும் சகோதரரும் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே எங்களுக்கு உரிய நியாயம் வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பெர்ஸி வலியுறுத்தினார். தொடர்ந்து நீதிபதி பாரதிதாசன் பிணவறையில் இருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடல்களையும் உறவினர்கள் முன்னிலையில் நேரில் ஆய்வுசெய்தார்.
இருவரின் உடலிலும் காயங்கள் இருக்கிறதா, காவலர்கள் தாக்கினார்கள் என்றால் அதற்கான ஆதாரம் இருக்கிறதா, என்பது குறித்து ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து உடற்கூறாய்வு நடத்தி, அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர். இதன் காரணமாக இரவு 7 மணி வரையிலும் உடற்கூறாய்வு நடத்த உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி குடும்பத்தினர் தற்போது மருத்துவமனையிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். இதனால் இரண்டாம் நாளாக இன்றும் இருவரின் உடல்களும் உடற்கூறாய்வு செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: உறவினர்கள் முன்னிலையில் பெனிக்ஸ், ஜெயராஜ் உடல்களை ஆய்வு செய்த நீதிபதி!