திருநெல்வேலி: நெல்லையை சேர்ந்த பேச்சாளரும், இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் உடல் நலக் குறைவால் நேற்று(ஆகஸ்ட் 18) காலமானார். அவரது மறைவு எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பேச்சாளராக திகழ்ந்து வந்த நெல்லை கண்ணன் சமய சொற்பொழிவு இலக்கிய சொற்பொழிவு என பன்முக திறமை கொண்டிருந்தார்.
அவரது கடைசி காலத்தில் சில சர்ச்சையான விஷயங்களை பேசி வம்பில் மாட்டிக் கொண்டார். இது போன்ற சூழ்நிலையில் நெல்லை கண்ணனுடனான அனுபவங்கள் குறித்து எழுத்தாளர் நாறும்புநாதன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். இது குறித்து நாறும்புநாதன் கூறும் போது, ‘தமிழ் கடல் நெல்லை கண்ணன் காலமாகிவிட்டார். அவர் கம்பராமாயணம் சிலப்பதிகாரம் முத்தொள்ளாயிரம் போன்றவற்றை மளமளவென கூறக்கூடியவர்.
பொதுவாக மேடைகளில் அவர் குறிப்புகள் எதுவும் இல்லாமல் சரளமாக பேசுவார். அவரது மறைவு இலக்கிய உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒரு முறை சிவகங்கை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மிக தாமதமாக வந்தார். அப்போது நெல்லை கண்ணன் தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரம் தன்னந்தனியாக பேசி கூட்டத்தை கலைய விடாமல் தக்க வைத்தார். அப்படிப்பட்ட பேச்சாற்றல் உடையவர்.
அடிக்கடி சண்டை போடுபவர்: சில சமயங்களில் அவர் சர்ச்சையான விஷயங்களை பேசியிருக்கிறார். கடைசியாக 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நெல்லை புத்தக திருவிழாவில் உரையாற்றினார். அனைவரிடமும் உரிமை எடுத்துப் பேசுவார். தனிப்பட்ட முறையில் என்னுடன் அதிகம் சண்டை போடுவார். ஒரு புத்தகத்தை அனுப்பி அதை உடனே படித்து கருத்து கூறும்படி சொல்லுவார். தாமதமாகிவிட்டால் புத்தகத்தை திருப்பி அனுப்பும்படி நகைச்ச்சுயாக பேசுவார். கடைசிவரை வயதான காலத்தில் கூட நெல்லை கண்ணன் கணினி இயக்குவதில் திறன் கொண்டிருந்தார்.
மத்திய அரசை காட்டமாக விமர்சிப்பார்:வீட்டில் இருந்தபடியே நாட்டின் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்வார். மத்திய அரசின் கொள்கைகளை மிகக் காட்டமாக விமர்சிக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டிருந்தார். அவர் நெல்லை தமிழில் பேசுவதால் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக அவர் எழுதிய குறுக்குத்துறை ரகசியங்கள் என்ற புத்தகம் வாசிப்பதற்கு மிக சுவாரசியமாக இருக்கும். அதில் அப்பகுதியில் உள்ள மக்கள் தாமிரபரணி நதியில் குளித்துவிட்டு வரும்போது பேசும் கதைகள் குறித்து நெல்லை மொழியில் எதார்த்தமாக எழுதி இருப்பார்.
அதிக இளம் சொற்பொழிவாளர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. அவர் இந்து சமயத்திற்கு எதிரானவர் அல்ல. பொதுவாக திருநெல்வேலி மாவட்டத்தில் இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் இந்து என்று சொல்ல மாட்டார்கள். சைவன் என்று தான் கூறுவார்கள். சைவன் என்று சொல்வதில் தான் அவர்களுக்கு பெருமை, எனவே அந்த பாரம்பரியத்தில் வந்தவர் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்ததால் எல்லா சமயத்தாரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே சுதந்திரம் பெறப்பட்டது. அப்படி இருக்கும்போது ஒரு சமுதாயத்தை மட்டும் காழ்ப்புணர்ச்சியோடு நடத்துவதற்கு எதிராக தான் அவர் குரல் கொடுத்தார்.
தரக்குறைவாக பேசியதில்லை: மத்தபடி அவர் இந்து சமயத்திற்கு எதிரானவர் அல்ல. இருப்பினும் மேடைகளில் சில சர்ச்சை பேச்சுகளை அவர் தவிர்த்து இருக்க வேண்டும். மத்திய அரசு குறித்து பேசும்போது கைது செய்யப்பட்டார். ஒரு சில குறிப்பிட்ட பிரச்சினையை பற்றி மட்டுமே அவர் பேசியிருப்பார். அந்த பேச்சை அவர் தவிர்த்திருக்க வேண்டும். இருப்பினும் கைது செய்யும் அளவுக்கு அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல. மேடைகளில் அவன், இவன் என்று பேசுவதால் அவர் தரக்குறைவாக பேசுகிறார் என்று அர்த்தமில்லை.
காமராஜரின் பெருமைகளை பேசியவர்: பொதுவாக இலக்கியவாதிகள் எல்லா படைப்பாளிகளையும் அவன் இவன் என்று உரிமையோடு பேசுவார்கள். காமராஜர் காலத்தில் இருந்தே அவர் பேச்சாளராக உள்ளார். எனவே அவருடன் நெருக்கமாக இருந்தார். மிகச் சிறந்த பேச்சாளர் என்பதால் காங்கிரஸ் அவரை பயன்படுத்திக் கொண்டது. காமராஜரின் நற்பண்புகளை இவர் அளவுக்கு யாரும் வெளியே சொல்லி இருக்க மாட்டார்கள். எந்த மேடையில் பேசினாலும் காமராஜரை தொடாமல் பேச மாட்டார் என்று நெல்லை கண்ணனின் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க:நெல்லை என்று சொன்னாலே கண்ணனையும் சேர்த்து தான் சொல்ல வேண்டும்... வைகோ உருக்கம்...