நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுப்புற சுவர் ஒரு சுற்றுச்சூழல் சுவராக மாற்றப்பட்டிருந்தது.
அதில் நம் நாட்டின் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றை பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு வகையான வரைபடங்கள் மற்றும் அவற்றின் தாவரவியல் பெயர்கள், அவற்றின் இனப்பெருக்க காலம், இனப்பெருக்களனம் செய்யும் இடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஓவியமாக வரையப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரசியல் கட்சியினர் தங்களின் ஆதாயத்துக்காக சமீபகாலமாக இந்த சுவரை சீரழித்து வருகின்றனர். குறிப்பாக தலைவர்கள் யாராவது நெல்லைக்கு வரும்போது, அவர்களை வரவேற்று சுவரில் போஸ்டர் அடித்து ஒட்டுவதால் வண்ணமயமான தோற்றம் கொண்ட சுவர் பாழடைந்து வருகிறது.
குறிப்பாக சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கரோனோ பாதிப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது முதலமைச்சரை வரவேற்பதற்காக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகர்கள் போஸ்டர் அடித்து இந்த சுற்றுச்சூழல் சுவர் முழுவதும் ஓட்டினர்.
இதனால் பறவைகள், விலங்கினங்கள், தாவரங்களின் அழகான தோற்றங்கள் மறைக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு நாளாக போராடி சமீபத்தில் இந்த போஸ்டர்களை கிழித்து சுவரை சுத்தம் செய்தனர்.
மீண்டும் அதேபோல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைவதற்காக சுண்ணாம்பு அடிக்கப்பட்டு வைத்திருந்தது. இந்த நிலையில் நேற்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு நெல்லை மாவட்டத்திற்கு வந்திருந்தார்.
அப்போது வழக்கம்போல் அவரை வரவேற்று மீண்டும் அதிமுக பிரமுகர்கள் வெள்ளையடிக்கப்பட்ட சுவர் என்று கூட பார்க்காமல் வளைத்து வளைத்து தங்களின் விளம்பரத்திற்காக சுவரில் போஸ்டர் அடித்து ஒட்டினர்.
இதனால் அழகான சுவர் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. இதை பார்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் அரசியல்வாதிகள் சுவரில் போஸ்டர் ஒட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தவறான சிகிச்சையால் குழந்தை பெற்ற பெண் மரணம்? கரோனா என்று சொல்லி துரத்திய மருத்துவமனை!