நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் பகுதியில் உடல் மெலிந்த நிலையில் யானை ஒன்று கடந்த சில தினங்களாக சுற்றித் திரிந்துவந்தது. இந்நிலையில, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த யானை இன்று உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள், யானையை பரிசோதித்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துவருகின்றனர். இதற்கிடையில் வனத்துறையினரின் அலட்சியத்தால்தான் யானை உயிரிழந்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
யானை ஒன்று உடல்நலம் சரியில்லாமல் சுற்றி திரிவதாக சில நாட்களுக்கு முன்பே தகவல் அளித்தும் வனத்துறையினர் நேரில் வந்து அந்த யானையை மீட்டுச் செல்லவில்லை என்றும், உரிய நேரத்தில் மீட்டு சென்று சிகிச்சை அளித்திருந்தால் யானையை காப்பாற்றி இருக்கலாம் என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.