திருநெல்வேலி: டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்ற விழிப்புணர்வு புத்தகத்தினை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லை சந்திப்பு இரயில்வே நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கினார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கிருஷ்ணசாமி, "தமிழ்நாட்டில் கொள்கை முடிவு என்ற பெயரில் கடந்த 20 வருடத்திற்கு மேலாக ஆட்சியாளர்களால் மதுவிலக்கு தளர்த்தப்படவில்லை. அரசாங்கமே மது விற்பனையில் கொண்டு தான் நடத்தக்கூடிய அளவிற்கு, வருவாயில் 3-ல் ஒரு பகுதிக்கு மேலாக 2023 பட்ஜெட்டில் 44 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வருவாய் காட்டினார்கள். கடந்த 2024 பட்ஜெட்டில் 52 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
தற்போது தமிழ்நாடு அரசு மது பாட்டில்களை நாளுக்கு நாள் விற்பனையை அதிகரித்து வருகிறது. இதனால் குடிப்பழக்கம் இல்லாதவர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். மது பலக்கத்திற்கு கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கட்டிட தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளிட்ட தினசரி கூலித் தொழிலாளர்களை மட்டுமே குறிவைக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 19 மதுபான ஆலைகள் செயல்படுகிறது. மது பாட்டில்களுக்கு வரிகள் செலுத்தாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் பார்களில் லட்சக்கணக்கான மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. மது பாட்டில் விற்பனைகளில் பல கோடி ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்தி அவருக்கு துணை போன முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடமும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.
டாஸ்மாக் மதுபானம் விற்பனையில் ரூ.1 லட்சம் கோடி ஊழலுக்கு காரணமான செந்தில் பாலாஜி மீது தனியாக வழக்கு தொடர ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளேன். இந்த வாரத்திற்குள் நிச்சயம் அனுமதி கிடைக்கும். அனுமதி கிடைத்த உடனே வழக்கு தொடர உள்ளேன். டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூட வேண்டும். அதாவது 19 மதுபான ஆலைகளையும் மூட வேண்டும். மதுபான விற்பனையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் பார்கள் மூலம் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக டாஸ்மாக் விளங்குவதால், அதனை உடனே அரசு மூட வேண்டும். ஆனால் மதுபானங்களை மூடி கள்ளு கடைகள் திறக்க வேண்டும் என்பது தவறு. ஆகையால் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை முழுவதுமாக மூட வேண்டும் அல்லது பொது மக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: PM Modi US visit: அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!