திருநெல்வேலி: நெல்லை கண்ணன், திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்தவர். சிறந்த பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், இலக்கியவாதி, அரசியல் பேச்சாளர் என பன்முக திறமை கொண்டிருந்தவர் நெல்லை கண்ணன். இவர் தனது மேடைப்பேச்சுகளில் அதிரடியாகப் பேசி பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். குறிப்பாகப் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து, பொது மேடையில் அவதூறாகப் பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும் நெல்லை மாவட்டத்திற்குரிய வட்டார மொழி வழக்கோடு பேசும் இவரது பேச்சு பலரையும் ரசிக்கும் வகையில் இருக்கும். பெருந்தலைவர் காமராஜர் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர். தான் பேசும் அனைத்து மேடைகளிலும் காமராஜரைப் பற்றி பெருமையாகப் பேசுவார். மேலும் குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதியே போன்ற நூல்களைகளையும் எழுதியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் நெல்லை கண்ணன் உயிரிழந்தார். இந்நிலையில் நெல்லை கண்ணனின் நினைவாக நெல்லை டவுண் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலையில் இணையும் தென்வடல் சாலைக்கு, நெல்லை கண்ணனின் பெயரைச் சூட்டத் திருநெல்வேலி மாநகராட்சி முடிவு செய்திருந்தது.
இதுகுறித்து இன்று (ஜூலை 27) நடைபெற்ற திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருந்தனர். திமுக ஆட்சியில் எப்படி நெல்லை கண்ணனுக்கு அரசு மரியாதை கொடுக்கலாம் என ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
காரணம் நெல்லை கண்ணன் பல்வேறு மேடைகளில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். குறிப்பாக 1996ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து நெல்லை கண்ணன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இது குறித்து திமுகவின் ஆந்திர மாநில மாணவரணிச் செயலாளர் எம்.பி. ராஜ வர்மன், இந்த தீர்மானத்தை எதிர்த்து தனது முகநூல் பக்கத்தில் பதிர்ந்துள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி மாமன்ற கூட்டம் தொடங்கியவுடன், தென்வடல் சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டுவது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர் சங்கர் இந்த தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் பேசும் போது, "நமது தலைவர் கருணாநிதியை, நெல்லை கண்ணன் திட்டியவர், கலைஞரின் போஸ்டரில் சாணம் பூசியவர், அப்படி இருக்கும்போது, எப்படி அவர் பெயரை சாலைக்கு சூட்டலாம்?" என்று தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதனையடுத்து தென்வடல் சாலைக்கு சாலைக்கு, நெல்லை கண்ணன் பெயர் சூட்டும் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை: சென்னையில் 2,01,050 படிவங்கள் பதிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்