எஸ்டிபிஐ கட்சியினரின் வாகனம் பறிமுதல்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் மேலப்பாளையம் பகுதிக்குச் சென்றார். அப்போது அவருடன் சென்ற கார்களில் தேர்தல் விதிகளை மீறி கட்சிக் கொடிகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறி அந்த வாகனங்களை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
எதிர்ப்பு
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எஸ்டிபிஐ கட்சியினர், காவல் துறையினர் மற்றும் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது விதமுறையை மீறி கட்சிக் கொடிகள் காரில் இருப்பதால் வாகனத்தை பறிமுதல் செய்வதாக அலுவலர்கள் உறுதியாகத் தெரிவித்தனர். அதற்கு எஸ்டிபிஐ கட்சியினர், எதிர்க்கட்சியான திமுக, ஆளும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதேபோல் தங்கள் வாகனங்களில் கட்சிக்கொடி பொருத்தி இருக்கும்போது தங்களது வாகனங்களை மட்டுமே ஏன் பறிமுதல் செய்ய வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்சிக் கொடியுடன் வந்த திமுக கார்
இந்த வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், நெல்லை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான ஏஎல்எஸ் லட்சுமணனும் அவரது ஆதரவாளர்களும் மூன்று கார்களில் அந்த வழியாகச் சென்றனர். அவர்களின் கார்களிலும் கட்சிக் கொடிகள் பொருத்தப்பட்டிருந்ததையடுத்து, எஸ்டிபிஐ கட்சியினர் அந்தக் காரை வழிமறித்து பறிமுதல் செய்யும்படி தேர்தல் அலுவலரிடம் வலியுறுத்தினர்.
திமுக - எஸ்டிபிஐ மோதல்
ஆனால் திமுகவினர் கார்களை பறிமுதல் செய்வதில் அலுவலர்களும் காவலர்களும் பாரபட்சம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரு கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னர் காவல் துறையினர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி திமுகவினரின் ஒரு வாகனம், எஸ்டிபிஐ கட்சியினரைச் சேர்ந்த இரண்டு வாகனங்கள் என மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் அனைத்தையும் மேலப்பாளையம் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 'பணம் வேண்டாம், பட்டா வேண்டும்': பதாகை வைத்த கிராம மக்கள்