திருநெல்வேலி: நெல்லை தெற்கு வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (40), கூலித் தொழிலாளியான இவருக்கும் வீரவநல்லூர் வடக்கு ரத வீதியை சேர்ந்த அய்யம்மாள் (35) என்பவருக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மாதவன் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அய்யம்மாள் தற்போது அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு (மே 24) மனைவி வீட்டுக்கு சென்ற மாதவன் வழக்கம் போல் தகராறு செய்து அங்கேயே தூங்கி உள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த மனைவி அய்யம்மாள் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாதவன் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவு சிகிச்சை பெற்று வருகிறார் மாதவனுக்கு 19% தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர் இது குறித்து நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்ட போது 19% காயம் ஏற்பட்டிருப்பதால் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை இருப்பினும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மனைவி கைது: இந்த நிலையில் கணவன் மீது சுடச்சுட ஆவி பறக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி அய்யம்மாளை வீரவநல்லூர் போலீசார் அதரடியாக கைது செய்தனர். அய்யம்மாள் மீது சட்டப்பிரிவு 324 இன் கீழ் ( கொடுங்காயம் ஏற்படுத்துதல்) கைது செய்து உள்ளனர். கணவன் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றியது குறித்து அய்யம்மாள் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். ஏற்கனவே ஆரம்பத்தில் எனது கணவர் அதிக அளவு மது அருந்திவிட்டு நாள்தோறும் வீட்டில் சண்டை போடுவார். அவருடன் வாழ முடியாமல் தான் அவரைப் பிரிந்து இருக்கிறேன் சம்பவத்தன்று நான் எனது தாய் வீட்டில் இருந்தேன். அங்கு வந்த எனது கணவர் மது போதையில் என்னிடம் தகராறு செய்தார். எதுவாக இருந்தாலும் இங்கே வைத்து தகராறு செய்ய வேண்டாம் என கூறியும் கேட்கவில்லை. அதனால் அவரை வெளியே தள்ளிவிட்டு கதவை பூட்டினேன். இருந்தாலும் நள்ளிரவு கதவை தட்டி தொந்தரவு செய்தார். என்னால் ஆத்திரம் தாங்க முடியாமல் எண்ணெயை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து அவர் மீது ஊற்றினேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று அய்யம்மாள் தனது வாக்குமூலத்தில் கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுப் பழக்கத்தால், தமிழ்நாட்டில் பல பெண்கள் தங்களது வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர் குறிப்பாக பலர், மதுவுக்கு அடிமையாகும் கணவர்களை திருத்தவும் முடியாமல் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தவும் முடியாமல் பரிதவித்து வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் கணவனின் அத்துமீறல் தாங்க முடியாமல் மாதவன் மீது அய்யம்மாள் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.14 கோடி வீணடிப்புக்கு தீர்வு இல்லை.. தற்பெருமை தேடுகிறதா நெல்லை மாநகராட்சி?