திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலம் சார்பில், டெங்கு விழிப்புணர்வு பேரணி நேற்று (பிப்.22) நடைபெற்றது. இந்த பேரணி பாளையங்கோட்டை நூர்துநாதன் சிலை முன்பு தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது.
இதனை பாளையங்கோட்டை மண்டல சேர்மன் பிரான்சிஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக தெற்கு பஜார் வழியாக பேரணி செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக குறிப்பிட்ட சில வீதிகளில் பேரணி செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால், அரசு சார்பில் நடைபெற்ற இந்த பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதனையடுத்து அங்கிருந்த மாநகராட்சி பெண் கவுன்சிலர் பேச்சியம்மாள், சம்பந்தப்பட்ட காவலர்களுடன் மக்களுக்காக நடத்தும் விழிப்புணர்வுக்கு ஏன் அனுமதி மறுக்கிறீர்கள் என்றும், தான் எம்எல்ஏவிடம் பேசுகிறேன் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதேநேரம் அனுமதி மறுத்த காவலர்கள் முன்னிலையில் பாளையங்கோட்டை காவல் நிலைய அதிகாரி ஒருவருக்கு, பெண் கவுன்சிலர் போன் செய்து விவரத்தை கூறினார்.
உயரதிகாரிகளுடன் பெண் கவுன்சிலர் பேச்சியம்மாள் பேசிய அடுத்த நொடியே, குறிப்பிட்ட பகுதியில் பேரணி செல்ல காவல் நிலையத்திலிருந்து அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள், உயரதிகாரிகளின் உத்தரவை ஏற்று அனுமதி மறுக்கப்பட்ட வீதிகளில் பேரணிக்கு வந்திருந்தவர்களை அனுப்பி வைத்தனர். உயரதிகாரிகளிடம் பேச்சியம்மாள் போன் பேசி அனுமதி வாங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நான் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகவில்லை.. 15 நிமிடம் போராடி தப்பித்தேன்.. எல்லாம் தப்பா பேசுராங்க.. கொடுமையை விளக்கும் பெண்..