திருநெல்வேலி: வைகோ சமீபத்தில் கோயில் ஒன்றில் பக்தியோடு வழிபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து மதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, வைகோ வழிபட்ட கோயில் அவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டி அருகே மேலமரத் தோணி கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராச பெருமாள் கோயில் என்பது தெரிய வந்துள்ளது.
இக்கோயில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வைகோவின் தாத்தாவான கோபால்சாமியால், அவரது சொந்த செலவில் கட்டி குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் வலைதளங்களில் பரவும் வீடியோவில், பூணுல் அணிந்த கோயில் பூசாரி வைகோவுக்கு பிரசாதம் வழங்குவதையும், அதை அவர் பக்தியோடு ஏற்றுக்கொண்டு அருந்துவது போன்றும், நெற்றியில் திருநீறு இடுவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக கோயிலுக்குள் செல்லும்போது வழக்கமாக வைகோ அணிந்திருக்கும் கருப்பு துண்டும் மிஸ் ஆகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வைகோவின் தாத்தா கோபால்சாமியால் கட்டப்பட்ட இந்த கோயிலை புனரமைத்து தரும்படி ஊர் மக்கள் வைகோவிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் இந்த கோயில் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வைகோ குடும்பத்தின் சார்பில் புனரமைக்க அரசிடம் ஆணை பெறப்பட்டது. பின்னர் கரோனா தொற்று காரணமாக பணிகளை தொடர முடியவில்லை. தற்போது புனரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
அந்த பணிகளைத்தான் கடந்த 20ஆம் தேதி வைகோ நேரில் பார்வையிட்டார். 2023ஆம் ஆண்டில் இக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட எந்த கோயிலுக்குச் சென்றாலும் வைகோ துண்டு அணிந்து சென்றதில்லை.
அந்த மரபைத்தான் இந்த கோயிலிலும் வைகோ பின்பற்றியுள்ளார். அவர் தனது கருத்தை எங்கும் அஞ்சாமல் எடுத்துரைப்பார் என்றாலும், மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு குறுக்கே போய் இருக்கும் இயல்பு அவருக்கு எப்போதும் இல்லை. பகுத்தறிவு பிரச்சாரப் பணிகள் தொடர்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் சிறந்த மேடைப் பேச்சாளருமான வைகோ, தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது கல்லூரி பருவத்தில் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் கொள்கைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அரசியலில் நுழைந்தார்.
தொடர்ந்து அண்ணா மறைவுக்குப் பிறகு, கருணாநிதி தலைமையிலான திமுகவில் வைகோ முக்கிய அங்கம் வகித்தார். கருணாநிதியின் நம்பிக்கை பாத்திரமாகவும் இருந்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலகிய வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.
மேலும் பெரியாரை ஆதரிப்பவர் என்ற முறையில் வைகோ கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியாக இருப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. குறிப்பாக மேடைகளில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், பகுத்தறிவு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்துவார். பெரியார் நினைவாக இன்று வரை தனது தோளில் கருப்பு துண்டு அணிவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார், வைகோ.
இதையும் படிங்க: கோயில்களின் பெயரில் போலி இணையதளங்கள்.. விரைவில் உரிய வழிமுறைகள்!