திருநெல்வேலி: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், ரெட்டியார்பட்டி போன்ற இடங்களில் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டுமென அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும், பலருக்கு தற்போது வரை சாதி சான்றிதழ் கொடுக்காததால் மேற்கண்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் தங்கள் படிப்பைத் தொடர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லை ரெட்டியார்பட்டியில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகள் காளீஸ்வரி தனக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். காளீஸ்வரி, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பிஏ சோஷியாலஜி படித்து வரும் நிலையில், சாதிச்சான்றிதழ் கேட்டு கல்லூரி நிர்வாகத்தினர் தொடர்ந்து மாணவியை கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.
எனவே, தனக்கு உடனடியாக அரசு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மாணவி காளீஸ்வரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”கல்லூரியில் சாதி சான்றிதழ் கொண்டு வரும்படி கேட்கின்றனர். எனக்கு கட்டாயம் சாதி சான்றிதழ் வேண்டும். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இருந்தே சாதி சான்றிதழ் கேட்டு அரசிடம் மனு அளித்து வருகிறேன். தற்போது வரை சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை.
எனது தந்தை மிகவும் கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்கிறார். எனவே, சாதிச் சான்றிதழ் இருந்தால் தான் என்னால் தொடர்ந்து படிக்க முடியும். தந்தைக்கு சாதிச் சான்றிதழ் இல்லை என்பதால் எனக்கும் தர மறுக்கின்றனர். எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்'' என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
சாதியை ஒழிக்க வேண்டும் என காலங்காலமாக பேசி வந்தாலும் கூட நடைமுறையில் அது சாத்தியமாகாது என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் கல்லூரி மாணவி தனது படிப்பைத் தொடர முடியவில்லை என வேதனையுடன் ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வில்லுப்பாட்டில் கலக்கும் 2K kid - கிராமிய கலையைக் காக்கும் மாதவி