திருநெல்வேலி: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல, நெல்லை மாவட்டத்தில் அதிமுக, அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார்.
ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஐ.எஸ். இன்பதுரையை ஆதரித்து பணகுடியில் கூடியிருந்த மக்களிடையே திறந்த வேனிலிருந்தவாறு பரப்புரை மேற்கொண்ட அவர், "திமுக வாரிசு அரசியல் கொண்ட கட்சி. அந்தக் கட்சிக்கு வாக்களித்தால் அது ஒரு குடும்பத்திற்கு ஆதரவாகச் சென்றுவிடும்.
மக்களுக்கு ஆதரவான கட்சி அதிமுக. வேளாண்மையில் தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. அதிமுக ஆட்சியில் குடிமராமத்துப் பணிகளால் குளங்கள் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு உள்ளன. இதன் மூலமாக நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்திசெய்து, நாட்டின் உயரிய விருதான விவசாய விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்தியாவில் பல்வேறு துறைகளில் அதிகமான விருது பெற்ற மாநிலம் தமிழ்நாடு. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த மாநிலமாகவும் விளங்குகிறது. உயர் கல்வி பெறுவதில் தமிழ்நாடுதான் முதலிடம். நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்த மாநிலம் தமிழ்நாடு.
ஆனால் இந்த அரசு எதுவும் செய்யவில்லை என ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார். இந்த ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஒரே மேடையில் என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க அவர் தயாரா? அவர் வர மாட்டார். ஏனெனில், அவர் கையில் சரக்கு ஏதும் இல்லை. கூடுதல் நாள்கள் சட்டப்பேரவையில் கலந்துகொண்ட ஒரே முதலமைச்சர் தமிழ்நாட்டிலேயே நான் ஒருவன்தான் என்ற பெருமை எனக்குக் கிடைத்துள்ளது.
இந்தியாவில் கண்ணில் தெரியாத காற்றில்கூட ஊழல் செய்த ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். 2006 -11 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் ஊழல் செய்த 13 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. ஆனால் எங்கள் ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி மக்களை குழப்பி ஆட்சிக்கு வர அவர் துடிக்கிறார்" என்று கூறினார்.
தொடர்ந்து நாங்குநேரி தொகுதி வேட்பாளர் தச்சை கணேஷ் ராஜாவையும், பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டுவையும் ஆதரித்துப் பரப்புரைசெய்தார்.