திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை சாலை தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பாக, அதிமுக சார்பில் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நேற்றிரவு (செப்.19) நடைபெற்றது.
அப்போது விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பூஜை செய்ய பாஜன மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் சென்றனர். ஆனால், அங்கு அதிமுக கூட்டம் நடந்ததால், பாஜகவினரால் பூஜை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சாமி பாடலை ஒலிப்பெருக்கியில் இசைத்து பூஜைகள் நடத்த முயன்றனர்.
இதனால் கூட்டம் நடத்துவதற்கும் இடையூறாக இருப்பதாகக் கூறி, அதிமுக நிர்வாகிகள் சிலர் அங்கு சென்று பாடலை நிறுத்துமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் சரியாக இரவு 10 மணிக்கு விநாயகருக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
ஏற்கனவே பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை கூறிய கருத்து காரணமாக தான் அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. தற்போது அண்ணாமலையின் பேச்சை கண்டித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என பகிரங்கமாக அறிவித்தார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், செல்லூர் ராஜு ஆகியோரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். இதற்கு பதில் அளித்து பேசிய அண்ணாமலை, எங்களுக்கு யார் தயவும் தேவை இல்லை, தன்மானத்தோடு வெற்றி பெறுவோம். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்பது இல்லை.
அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்தாலும், இரு கட்சிகளின் கொள்கைகள் வேறு என பேசி இருந்தார். இது போன்ற சூழ்நிலையில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக பாஜகவினர் நேரடியாக மோதி கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.