நெல்லை: திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி கடற்கரை கிராமத்தில் நேற்று மதியம் அந்த ஊரைச் சார்ந்த ராகுல், முகேஷ், ஆகாஷ் என்ற மூன்று சிறுவர்கள் கடலில் குளிக்க சென்றனர். நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பாததால் அவர்கள் கடலின் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் இரவு முழுவதும் கடற்கரை பகுதியில் தேடும் படலம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் நவ்வலடி அருகே உள்ள கோடாவிளை என்ற இடத்தில் ஆகாஷ் மற்றும் ராகுல் ஆகிய இரண்டு சிறுவர்களின் உடல் கரை ஒதுங்கியது. இதில் ஆகாஷ் பத்தாம் வகுப்பு, ராகுல் ஒன்பதாம் வகுப்பும் அதே ஊரில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். மேலும் முகேஷின் உடலை கடலோர காவல் குழுமத்தினர், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் தேடி வந்த நிலையில் அவரது உடலும் கோடா விளை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.
மூன்று சிறுவர்களின் உடல்களும் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் கடலில் மூழ்கி உயர்ந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த சிறுவர்கள் மூன்று பேரும் செல்போனில் டிக் டாக் போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக சினிமா படங்களில் வரும் வசனங்களை பின்னணியில் ஒலிக்க வைத்து டிக் டாக் போன்ற செயலியில் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்துள்ளனர். அந்த வகையில் நேற்று கடலுக்குள் செல்வதற்கு முன்பு மேற்கண்ட சிறுவர்கள் ”மச்சான் நான் சாகப் போறேன் டா” என்ற வசனம் இடம்பெற்ற வீடியோவுக்கு ரீல்ஸ் செய்துவிட்டு அதை வழக்கம் போல் சமூக வலைதளங்களில் வெளியிட்டு சென்றுள்ளனர்.
தற்போது சிறுவர்கள் வெளியிட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே செல்போனில் மூழ்குவதால் சிறுவர்கள் இளைஞர்கள் பலரின் வாழ்க்கை சீரழிந்து வரும் சூழ்நிலையில், ரீல்ஸ் வீடியோ ஆர்வத்தால் மூன்று அப்பாவி சிறுவர்கள் தங்கள் உயிரை பலி கொடுத்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவம்: அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் சபாநாயகர்..!