திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூர் அருகே ரோஸ்மியாபுரம் பகுதியில் கரடி ஒன்று வலம் வருவதை அப்பகுதி மக்கள் பார்த்து உள்ளனர். இதனால் அச்சம் அடைந்த ஊர் மக்கள் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து உள்ளனர். அப்போது ரோஸ்மியாபுரத்தில் உள்ள சுடலைமாடன் கோயிலுக்குள் கரடி புகுந்து உள்ளது.
இந்த நிலையில் கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கரடி கோயிலுக்குள் சாமியின் பீடம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி எதாவது உணவு இருக்கிறதா எனத் தேடி மோப்பம் பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்று உள்ளது.
பின்னர், உணவைத் தேடி அங்கும், இங்கும் அலைவது போன்ற காட்சிகளும் இடம்பெற்று உள்ளது. கரடி கோயிலுக்குள் உலா வரும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பகுதியில் கரடி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
குறிப்பாக களக்காடு, அம்பாசமுத்திரம், வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி போன்ற பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் கரடி நடமாட்டம் அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில், தற்போது வள்ளியூர் அருகே ரோஸ்மியாபுரம் பகுதியில் கரடி ஊருக்குள் புகுந்து இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் பீதி அடைந்து உள்ளனர்.
கரடி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இடம்பெயர்ந்து ஊருக்குள் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே வனத்துறை அதிகாரிகள் உடனடியாக முகாமிட்டு கூண்டு வைத்து கரடியை பிடித்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க:சோலோவாக உலா வரும் ஒற்றைக் காட்டு யானை..! பீதியில் மக்கள்!