திருநெல்வேலி: சென்னை கே.கே.நகரை சேர்ந்த ரவி(26) என்பவர் கடந்த மாதம் 30ஆம் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென மாயமானார். இதுகுறித்து ரவியின் மனைவி ஐஸ்வர்யா சென்னை கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ரவியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் செந்தில் குமார் குடும்பத்தினருக்கும் ரவி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் செந்தில்குமார், அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரவியை ஆட்டோவில் கடத்திச்சென்று செங்கல்பட்டு அருகே காட்டுப்பகுதியில் பெட்ரோல் ஊற்றி, எரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.
செந்தில் குமார் செம்பியம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். கொலை குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காவலர் செந்தில் குமார், அவரது கூட்டாளிகள் ஐசக் எட்வின் உள்பட 5 பேரை தீவிரமாகத் தேடிவந்த நிலையில், செந்தில் குமார் மற்றும் ஐசக் இருவரும் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
ஐசக் நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியைச்சேர்ந்தவர் ஆவார். எனவே, அவரது உதவியுடன் செந்தில் குமார் நெல்லைப்பகுதியில் தலைமறைவாகி இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் காவல் துறையினர் தன்னை நெருங்குவதை அறிந்த செந்தில் குமார், ஐசக் இருவரும் இன்று(ஜூன் 13) நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
இதையடுத்ரு இருவரையும் வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நெல்லை மாவட்ட இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆறுமுகம் உத்தரவிட்டார். மேலும் 16ஆம் தேதிக்குள் இருவரையும் செங்கல்பட்டு மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விசாரணைக் கைதி மரணம் - பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளர் மீது குவியும் குற்றச்சாட்டுகள்!