திருநெல்வேலி மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆங்காங்கே பாலங்கள், சாலை விரிவாக்க பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன.
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே நெல்லை சந்திப்பையும் பாளையங்கோட்டையையும் இணைக்கும் வகையில் கொக்கிரகுளத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு அரசு ரூ. 16 கோடி நிதி ஒதுக்கியது. இந்த புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கின. தற்போது புதிய பாலம் 10 தூண்கள், நடைபாதை வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டது.
புதிய பாலத்தின் இருபுறமும் சாலை விரிவாக்கத்திற்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் 32 வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த இடத்தை காலி செய்ய நெடுஞ்சாலை துறை நேட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து வணிக நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமும் கடைகளை காலிசெய்ய அறிவுறுத்தியது.
பின்னர் மாவட்ட சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழு நேரில் சென்று வணிக நிறுவனத்தினரிடம் விளக்கமளித்ததோடு, 24 மணி நேரத்தில் கடைகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில், இன்று (ஜன.27) அதிகாலை முதல் அந்தக் கட்டடங்கள் இடிக்கும் பணி பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இதனை வேடிக்கை பார்க்க கூடிய கூட்டத்தால் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம் பகுதிகளுக்கு இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கும் கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புதிய நெல் கிட்டங்கி கட்டடம் திறப்பு விழா