திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஒரு பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் இன்று (டிச.16) தனது நண்பருடன் பைக்கில் ஏர்மாள்புரம் என்ற பகுதியை நோக்கி பரோட்டா வாங்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது சாலையில், ஏர்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் பைக்கை இளைஞர் முந்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன், ஏர்மாள்புரத்தில் உள்ள பரோட்டா கடை அருகே நின்று கொண்டிருந்த இளைஞரை அவரது சாதிப் பெயரைக் கூறி அவதூறாகப் பேசியதோடு, கீழே கிடந்த கம்பியை எடுத்து கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த இளைஞர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
அதையடுத்து, காயமடைந்த இளைஞரை மீட்ட அருகில் இருந்த பொதுமக்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர், இளைஞர் அளித்த புகாரின் பேரில், மணிமுத்தாறு காவல்துறை மாரியப்பன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.சதீஷ் குமார் தலைமையிலான காவல்துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பைக்கில் முந்திச் சென்றவரைச் சாதிப் பெயரைச் சொல்லித் தாக்கிய கொடூரம் சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், பைக்கில் முந்திச் சென்ற ஒரே காரணத்திற்காக, இளைஞரின் சாதிப் பெயரைக் குறிப்பிட்டுத் தகாத வார்த்தையில் பேசி தாக்கிய சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி!