நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேவுள்ள தாழைகுளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், சேர்மக்கனி தம்பதியினரின் மகன் சரவணன் (வயது11). இவர் கரந்தானேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலையில் சிறுவன் தனது நண்பர்களுடன் அருகிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்கச்சென்றார்.
இதில் எதிர்பாரதவிதமாக சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கியுள்ளார். அருகிலிருந்த சக நண்பர்கள் சிறுவனை காப்பாற்ற வழிதெரியாமல், வீட்டுக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அச்சிறுவனின் உறவினர்கள் கிணற்றுக்கு வந்து பார்த்தபோது, சரவணனின் உடல் தண்ணீருக்குள் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து நாங்குநேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், ராட்சத மோட்டார்களைப் பொறுத்தி தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கிணற்றில் தண்ணீர் அதிகளவு இருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.
சுமார் 10 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சரவணனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர், உடற்கூறாய்விற்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க:டிராக்டர் - லாரி மோதி விபத்து: 11 பேர் படுகாயம்