நெல்லை: வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக, நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அணை பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து ஒரேநாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 4 கன அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 கன அடியும் என உயர்ந்துள்ளது.
இதனிடையே, தாமிரபரணி ஆறு வடக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து 5,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என இன்று (டிச.4) மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மாவட்டத்தின் பிரதான அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடி உயர்ந்து 113 அடியாக உள்ளது. இந்தநிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 504.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு விநாடிக்கு 2,586 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதேபோல, 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை ஒரே நாளில் 3 அடி உயர்ந்து, நீர்மட்டம் 127.62 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணை ஒரு அடி உயர்ந்து, 78.80 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 822 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இங்கு 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில், தாமிரபரணி வடக்கு அரியநாயகிபுரம் அணையில் இருந்து 5,340 கன அடி தண்ணீர் ஆற்றில் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிக்கு செல்லவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து நெல்லை மாநகர காவல் துறையினர், ஆற்றுக் கரையோர பகுதிகளில் நேரடியாக சென்று ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்கலாம் என்பதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலையில் 60 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 65 மில்லி மீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 72 மில்லி மீட்டரும், ஊத்துப்பகுதியில் 80 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 70 மில்லி மீட்டரும் என மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையை புரட்டிப்போடும் மிக்ஜாம் புயல்; இன்று இரவு வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை!