தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்தாண்டு (2021) ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகின.
வாக்குப்பதிவு மையத்தை தயார் செய்வது, வாக்கு எண்ணிக்கை, பயணங்கள், அலுவலக செலவுகள், அலுவலர்களுக்கான ஊதியம் என சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்காக 744 கோடி ரூபாய் செலவானதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தேர்தலில் புதிய தொழில் நுட்பம்
அதில், தேர்தலுக்கு 617 கோடியே 75 லட்சம் ரூபாயும் கோடியும், தொலைபேசி, எரிபொருள், வாடகை வாகனம், விளம்பரம் உள்ளிட்ட செலவினமாக 126 கோடியே 18 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், GIS தொழில்நுட்பத்தின் உதவியுடன், மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளிலுள்ள 1,924 வாக்குச் சாவடிகளும் முறையாக கண்காணிக்கப்பட்டன.
இதில், வாக்காளர்கள் முதல் தேர்தலில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில், ”வாக்குச்சாவடி வழிகாட்டி” என்ற இணையதள அமைப்பைத் திருநெல்வேலி மாவட்ட தேசிய தகவலியல் மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கியது.
இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் தங்கள் இருப்பிடத்திலிருந்து தங்களுக்குரிய வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல வேண்டிய வழிகளைத் தெளிவாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மேலும் 360 கோண பரிணாமத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளின் உட்புறத் தோற்றத்தையும் இந்த இணையதளம் வழியாகவே எளிதாகப் பார்த்துக் கொள்ளலாம்.
நெல்லை ஆட்சியருக்கு விருது
தேர்தலில் இது போன்ற கணினி தொழில்நுட்பத்திலுள்ள புதிய கண்டுபிடிப்புகளை தேர்தலுக்காக முன்மாதிரியாகக் கையாண்டதைப் பாராட்டும் விதமாகத திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான விஷ்ணுவுக்கு தேசிய வாக்காளர் தினமான, ஜன 25 அன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்திய தேர்தல் ஆணையம் விருது வழங்கி பாராட்ட இருப்பதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று(ஜன 25) நடைபெற்ற விழாவில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆட்சியர் விஷ்ணுவுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:GIS தொழில்நுட்ப உதவி மூலம் சட்டப்பேரவை தேர்தல் - நெல்லை ஆட்சியருக்கு விருது