திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக.19) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கரோனா ஊரடங்கால் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுச் சென்றனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இசக்கியம்மாள் என்ற பெண் தான் இலவச வீட்டுமனை பட்டா வாங்கிய போதும், சிலர் வீடு கட்ட விடாமல் தடுத்து நிறுத்துவதாக கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அதேபோல் சுலைமான் என்ற நபரும் காவல் துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்து துன்புறுத்துவதாக கூறி மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் இரண்டு பேரையும் விசாரணைக்காக பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் இதுபோன்று தற்கொலை முயற்சியில் பொதுமக்கள் ஈடுபடும் சம்பவம் தொடர்கதையாகி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிசான் திட்ட முறைகேடு பணம் 86% திரும்பப் பெறப்பட்டுள்ளது - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்