திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், ரெட்டையார்பட்டி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் நாராயணன், நாங்குநேரி தொகுதியின் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இந்த நிலையில் ரெட்டையார்பட்டி நாராயணனின் சொந்த ஊரான ரெட்டையார்பட்டியில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஊர் நாட்டாமை தரப்பினருக்கும் நாராயணன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்து உள்ளது.
எனவே, கோயில் திருவிழாவை சுமுகமாக நடத்துவது தொடர்பாக சமாதானக் கூட்டம் போட்டு உள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ராமர் என்று வாலிபர் ஊர் நாட்டாமைக்கு ஆதரவாக பேசி இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரெட்டையார்பட்டி நாராயணன் மற்றும் அவரது சகோதரரான வழக்கறிஞர் கண்ணன் உட்பட ஆறு பேர் சேர்ந்து ராமரை கடுமையாகத் தாக்கி உள்ளனர். இதில் ராமர் காயம் ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நாட்டாமை தரப்பில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் முன்னாள் எம்எல்ஏ ரெட்டையார்பட்டி நாராயணன் அவரது சகோதரர் கண்ணன் உட்பட ஆறு பேர் மீது மூன்று பிரிவுகளில் ( 294பி, 323 மற்றும் 506/1) வழக்குப் பதிவு செய்து உள்ளனர். தமிழகத்தின் பிரபல கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், வாலிபரை கடுமையாகத் தாக்கி குற்ற வழக்குகளுக்கு உள்ளான சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அரசியல் களத்தில் இணைந்த ஓபிஎஸ் - டிடிவி தினகரன்: கூட்டாக தேனியில் போராட்டம்!