திருநெல்வேலி: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த குறைதீர் முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள், தங்களின் பிரச்சினைகள் குறித்து ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிப்பார்கள். ஆனால், சமீப காலங்களில் பொதுமக்கள் அளிக்கும் பெரும்பாலான மனுக்கள் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், குறைதீர் முகாம் நடைபெறும் நாட்களில், மனு அளிக்க வரும் நபர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயல்வது, தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அந்த வகையில், கடந்த வாரம் நடைபெற்ற குறைதீர் முகாமில், 80 வயது மூதாட்டி ஒருவர், ஆட்சியர் முன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, போலீசார் மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில், ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியில் மனு எழுதிக் கொடுக்கும் பெண் ஒருவரை தொடர்பு கொண்ட நிலையில், மனுவை மட்டும் கொடுத்தால் தீர்வு கிடைக்காது, தற்கொலைக்கு முயன்று மிரட்டினால்தான் பிரச்னை தீரும் என கூறியுள்ளார். அந்த பெண்ணின் பேச்சைக் கேட்டு, தான் இப்படி நடந்து கொண்டதாகவும் மூதாட்டி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மூதாட்டியை தற்கொலைக்கு தூண்டி, மனு எழுதி கொடுக்கும் தங்கம் என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். முன்னதாக மனு எழுதும் நபர்களிடையே ஒற்றுமை இல்லாமல், ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே சண்டை போடும் சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும், மனு எழுதுவதற்காக பொதுமக்களிடம் 50 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில், பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியின் சமூக பாதுகாப்புத் துறை மாணவிகளைக் கொண்டு, பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, நேற்று (டிச.04) நடைபெற்ற குறைதீர் முகாமில், ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே, சுய உதவிக் குழுவினர் மற்றும் மாணவிகள் இணைந்து பொதுமக்களுக்கு மனுக்களை எழுதிக் கொடுத்துள்ளனர். இதற்காக மக்களிடமிருந்து ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கட்டணம் மனு எழுத வரும் மாணவிகளுக்கு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, மனு எழுத பொதுமக்களிடம் 100 ரூபாய் வரை கட்டணம் வசூலித்து வந்த நிலையில், நெல்லை ஆட்சியரின் நடவடிக்கையால் தற்போது 10 ரூபாய் கட்டணத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: குளம் போல் மாறிய சென்னை விமான நிலையம்! வீடியோ வைரல்!