முன்னதாக ஒரு மகனை காவல் துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்ற நிலையில், மற்றொரு மகனையும் காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்ததால், விரக்தியடைந்த தாய், காவல் துறையினர் முன்பே தீக்குளித்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவரது இளைய மகன் பிரதீப் (20) மீது போக்சோ வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் திருட்டு வழக்கு ஒன்றில் அவரை சுத்தமல்லி காவல் ஆய்வாளர் குமார் சித்ரா கைதுசெய்தார். பின்னர் மீண்டும் அவரது சகோதரரான பிரசாந்தை (28) நேற்று (நவ.24) அதிகாலை வீட்டுக்குச் சென்று அழைத்துச் சென்றுள்ளார்.
எந்தத் தவறும் செய்யாத மூத்த மகனை காவல் துறையினர் அழைத்துச் செல்ல சகுந்தலா மறுப்புத் தெரிவித்துள்ளார். அப்போது, காவல் ஆய்வாளர் குமார் சித்ரா சகுந்தலாவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால்தான் அவர் தீக்குளித்து பலியானதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று ஆய்வு நடத்தி சகுந்தலா இறப்பு குறித்து தற்கொலை வழக்கு பதிவுசெய்து, பின்னர் அந்த வழக்கை நெல்லை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி காவல் துறையினர் சகுந்தலாவை அடித்து துன்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே சுத்தமல்லி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி நெல்லை மாவட்ட அனைத்துக் கட்சி சார்பில் இன்று (நவ. 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அனைத்துக் கட்சி சார்பில் உயிரிழந்த சகுந்தலாவின் தாயார் லட்சுமி அம்மாள் பெயரில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் பாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "காவல் துறையினர் கடந்த ஆறு மாதங்களாக சகுந்தலா குடும்பத்தை தொந்தரவு செய்துவந்துள்ளனர். சம்பவத்தன்று காவல் துறையினர் சகுந்தலாவையும் அவரது மகனையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
சுத்தமல்லி காவல் ஆய்வாளர், காவலர்களைப் பதவி நீக்கம் செய்வதுடன் உயிரிழந்த சகுந்தலா குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தார்.
இதையும் படிங்க: புயல், மழையின்போது மின் விபத்துகளைத் தடுப்பது எப்படி?