திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர் கடந்த 23ஆம் தேதி முருகன்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் நிர்வாகிகள் ஹரி, மணி, ஊழியர்கள் பேர் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையில் சம்பவம் நடைபெற்ற இரண்டு தினங்களுக்கு பிறகு இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் பிரம்மா மீதும் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது ஓட்டல் நிர்வாகம் தரப்பில் ஊழியர் பொன்னரசு என்ற நபர் பிரம்மா மீது புகார் அளித்திருந்தார். அதில் தன்னை சாதிப்பெயரை சொல்லி பிரம்மா திட்டியதாக குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் வழக்கறிஞர் பிரம்மா மீது பட்டியல், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் காவல்துறையின் இந்த நடவடிக்கையை திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கடுமையாக கண்டித்தனர். பிரம்மா மீது போடப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கினை திரும்பப் பெறக் கோரி வழக்கறிஞர்கள் கடந்த 26ஆம் தேதி திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணனிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று(அக்.29) திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அதே கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் இல்லாததால் அங்கிருந்த அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
இது குறித்து வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில், வழக்கறிஞர் பிரம்மா தாக்கப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்கொடுமை தடுப்பு சட்டம் எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ? அதை சிதைக்கும் வகையில் காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஓட்டல் ஊழியரை கட்டாயப்படுத்தி புகார் அளிக்க செய்து வழக்கறிஞர் பிரம்மா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்புக்காக கொண்டுவந்த இந்த சட்டத்தினை பிற சமுதாயத்தினர் தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே இந்த வழக்கை திரும்ப பெறக்கோரி கடந்த 26ஆம் தேதி காவல்துறை துணை ஆணையரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. ஓட்டல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும்படி காவல்துறையினரிடம் வலியுறுத்தினோம்.
ஆனால் இதுவரை அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக வந்துள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிலைதடுமாறி இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு