தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்கள் மிகக் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நேரங்களில் வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் சிறு,குறு நிறுவனங்கள் பேருந்து போக்குவரத்து என அனைத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது.
கொடிய உயிர்க்கொல்லி நோயிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து இருந்தாலும்கூட, ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையில் சிக்கித் தவித்தனர். அதேபோல் பல சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஊரடங்கால் விளம்பரத்துறை கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்தது.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கால் 50% விளம்பர வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக முகவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தற்போது குண்டூசியில் இருந்து பிரமாண்டமான குடியிருப்புகள் வரை, அனைத்தையும் விற்பனை செய்ய விளம்பரம் மிக அவசியமான ஒன்றாக உள்ளது.
விளம்பரங்களில் பலவகையான பிரிவுகள் உள்ளன. டிவி விளம்பரங்கள், தினசரி நாளிதழ் விளம்பரங்கள், தொழில் நிறுவன உள்புற, வெளிப்புற விளம்பர பதாகைகள், ரயில் மற்றும் பஸ் உள்ளிட்டவற்றில் செய்யப்படும் போக்குவரத்து விளம்பரங்கள் எனப் பல வகையான விளம்பரங்கள் உள்ளன.
இவற்றில் பெரும்பாலான விளம்பரங்கள் அதற்காக இயங்கிவரும் முகவர்கள் மூலமே வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட விளம்பர முகவர்கள் உள்ளனர். இவர்கள் டிவி, பண்பலை, நாளிதழ்கள் மற்றும் வெளிப்புற விளம்பரப் பதாகைகள் ஆகியவற்றில் விளம்பரங்கள் வாங்கி, வெளியிட்டு வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் கரோனா காரணமாக, நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், இங்கு விளம்பர வருமானம் 50 விழுக்காடு வரை குறைந்துள்ளது.
வழக்கமாக, மாதம் அதிகபட்சம் 10 கோடி ரூபாய் வரை விளம்பர வருமானம் வருவதாகவும்; இதில் கரோனா காலத்தில் வெறும் ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவாகவே, ஒட்டுமொத்தமாக விளம்பர வருவாய் இருந்ததாகவும் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஊரடங்கு காலத்தில் கோயில் திருவிழாக்கள், கல்யாணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
இதனால் திருவிழா விளம்பரங்கள் முற்றிலும் தடைபட்டது. அதேபோல் கல்வி விளம்பரங்கள் விளம்பரத் துறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதாவது ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்காக விளம்பரங்களை அள்ளிக் கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால் தற்போது வரை, கல்வி விளம்பரங்கள் முற்றிலும் தடைபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் விளம்பர முகவர்கள் கடுமையான வருவாய் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து நெல்லையில் யுவர்ஸ் பப்ளிசிட்டி என்ற பெயரில் விளம்பர நிறுவனம் நடத்தி வரும் முகவர் சிவராம் நம்மிடம் கூறுகையில், 'நாங்கள் தினசரி நாளிதழ்கள், டிவி, பண்பலை ஆகியவற்றில் விளம்பரம் செய்து வருகிறோம். மேலும் ரயில் நிலையங்களில் எல்இடி விளம்பரம் செய்து கொடுக்கிறோம். கரோனாவால் விளம்பரத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளிதழ்களில் விளம்பரப் பாதிப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. ஏனென்றால், ஊரடங்கு காலத்தில் நாளிதழின் விற்பனை சரிந்தது. இதை அறிந்த நிறுவனங்கள் விளம்பரங்கள் வழங்க முன்வரவில்லை. இதன் காரணமாக ஊரடங்கு காலத்தில் 50 விழுக்காட்டிற்கும் குறைவான விளம்பரங்களே கிடைத்தது.
அதேபோல் கல்வி விளம்பரம் முற்றிலும் தடைபட்டது. குறிப்பாக, பள்ளிகள், கல்லூரிகள் இயங்காததால் பள்ளிகள், கல்லூரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் தற்போது வரை கிடைக்காமல் உள்ளது.
அதேபோல் பண்டிகை கால விளம்பரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 10 முதல் 15 விளம்பர முகவர்கள் வரை உள்ளோம். மாதம் சராசரியாக ஒரு முகவர் 15 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்வார்கள். ஆனால், ஊரடங்கு காலத்தில் இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வியாபாரம் செய்வதற்கே மிகவும் சிரமப்பட்டோம். அதேபோல் ஜிஎஸ்டி அளிப்பதில் எங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், ஜிஎஸ்டி செலுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் தற்போது வரை நீடித்து வருகின்றன. இது போன்ற சூழல்களால் விளம்பர முகவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்' என்று தெரிவித்தார்.
அதேபோல் மற்றொரு முகவர் பலராமன் கூறுகையில், 'கரோனா ஊரடங்கிற்குப் பிறகு விளம்பரத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததாலும் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளாலும் விளம்பரம் கொடுப்பதற்கு நிறுவனங்கள் தயங்குகின்றனர். தொடர்ந்து தற்போது வரை அரசின் கெடுபிடி இருப்பதால், எங்களுக்கு வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளனவா? ஓர் கள ஆய்வு