சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஆக.20) அரசு சார்பில் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். இந்த சூழலில் சாதிரீதியாக ஏதும் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், ஆதித்தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ஜக்கையன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஒண்டிவீரன் நினைவிடத்திற்கு மாலை அணிவிக்க வந்தனர். அவர்களிடம் ஒவ்வொரு கட்சிக்கும் ஐந்து பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி உண்டு என காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
இதற்கு ஆதித்தமிழர் கட்சியினர், ’நாங்கள் உள்ளே சென்று முழக்கமிட வேண்டும். எனவே அனைவரையும் அனுமதியுங்கள்’ எனக் கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் அறிவுரையை ஏற்று ஐந்து பேர் மட்டும் உள்ளே சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இந்து மக்கள் கட்சியின் தென் மண்டல செயலாளர் ராஜா பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது ஆதித்தமிழர் கட்சியினர், ‘இந்துத்துவ அமைப்பை உள்ளே விட அனுமதிக்க மாட்டோம். மாட்டு இறைச்சி சாப்பிட்டால் அசிங்கம். அதே, மாட்டு கோமியத்தை அருந்துவது இனிக்குதா?’ போன்ற வார்த்ததைகளை உபயோகித்து கோஷம் எழுப்பத் தொடங்கினர்.
இந்த வாய்த்தகராறு கைகலப்பாக மாறிவிடாமல் இருக்க அங்கிருந்த காவல் துறையினர், ஆதித்தமிழர் கட்சியினரை சமாதானப்படுத்தி, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர், இந்து மக்கள் கட்சியினர் உள்ளே சென்று மாலை அணிவித்தனர்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிலைக்கு மாலை அணிவிக்க ஐந்து பேரை மட்டுமே அனுமதிப்போம் என்று காவல் துறையினர் கூறுகின்றனர். ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வந்து மாலை அணிவிக்கின்றனர். இது ஒரு மிகப்பெரிய தீண்டாமையாகும். எனவே அனைவரையும் உள்ளே அனுமதிக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவீரன் ஒன்டிவீரனுக்கு இங்கே நினைவு மண்டபம் அமைத்து இருந்தாலும் கூட சென்னையில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். இதேபோல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் சென்னையில் சிலை அமைக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:திமுக முன்னாள் அமைச்சர் மறைவு : மூன்று நாள் துக்க அனுசரிப்பு