திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ் (25). இவர் அப்பகுதியில் உள்ள கேபிள் டிவி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில், காளிராஜ் நேற்று முன்தினம் இரவு (டிச. 09) பணியை முடித்துவிட்டு சாந்தி நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் காளிராஜை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், கழுத்து, முகம், கைகளில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோல், மாநகரக் காவல் துணை ஆணையர் சரவணனும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் காளிராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், காளிராஜ் சமீபத்தில் தங்கை முறையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதன் காரணமாக அப்பெண்ணின் உறவினர்கள் அவரை கொலைசெய்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருநெல்வேலியில் இளைஞர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை