நெல்லை: பேட்டையில் இருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையில் ஆதாம் நகர் உள்ளது. நெல்லை மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான குழாய்கள் ஆதம் நகர் எல்லையில் வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ளது.
இங்கே பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவது வழக்கம். இதன் காரணமாக குப்பை மேடாக அந்த பகுதி காட்சி அளித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மதிய வேளையில் அவ்வழியாக சென்ற ஒரு சிலர் சடலமொன்று சாலை ஓரம் எரிவதை கண்டு பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துரையினர், பாதி எரிந்த நிலையில் உள்ள சடலத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆட்டோவில் மர்ம நபர்கள் சிலர் ஒரு பெண்ணின் உடலை அந்தப்பகுதியில் வீசியதுடன் தீ வைத்து எரித்தது தெரியவந்தது.
எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தின் கழுத்தில் துணி ஒன்று இருக கட்டியிருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர். மேலும் ஆதம் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் இதில் சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பழையபேட்டை கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் அவரது சகோதரி மேரி ஆகியோர் அவரது பாட்டி சுப்பம்மாளை அழைத்து வந்ததை தெரிவித்தார்.
இதனடிப்படையில் மாரியம்மாள் மற்றும் மேரியை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் வயது முதிர்வு காரணமாக பராமரிக்க முடியாத நிலையில் அவரை தீ வைத்து எரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து பேட்டை காவல்துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வயதான மூதாட்டியை பேத்திகளே கொடூரமாக தீ வைத்து எரித்த கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மனைவி, குழந்தையை ஆட்டோவில் தீ வைத்து எரித்து இளைஞர் தற்கொலை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!