கோவிட்-19 தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே செல்கிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் பெரும் இன்னல்களைச் சந்தித்துவருகின்றனர். நகரத்து நாகரிகத்தை விரும்பி வருமானத்திற்காக நகர்ப் புறங்களில் குடிபெயர்ந்த லட்சக்கணக்காண தொழிலாளர்கள், ஒரே நாளில் வேலையிழந்தனர். நிச்சமற்ற எதிர்காலத்தால் சொந்த நாட்டிலேயே அகதிகள் போல பல்லாயிரம் கிலோமீட்டர் நடந்தே தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் காட்சிகளையும் நம்மால் பார்க்க முடிந்தது.
"சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா" என்ற பாடல் வரிக்குகேற்ப சொந்த ஊரின் மண்வாசனையும் பழக்கவழக்கங்களும் எப்பவுமே ஒருவருக்குப் பெரியதுதான். அதிலும், குறிப்பாக கிராமத்து வாழ்க்கை என்றால் பேரின்பம்தான்! பசுமையான கிராமத்தில் எவ்வித நகரத்து ஆர்ப்பாட்டமும் இன்றி வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு அதுவே பேரின்பம். நகரத்து வாழ்க்கையைக் குறிப்பாக சென்னை வாழ்க்கையைக் கிராமத்து மக்கள் எப்போதும் ஒருவித தயகத்துடனேயே அணுகுவார்கள்.
அதேபோன்ற ஒரு சுவாரசிய சம்பவம்தான் தற்போது அரங்கேறியுள்ளது. சென்னையில் தனது மகன் வீட்டில் வசித்துவந்த முதியவர் ஒருவருக்கு நகரத்து வாழ்க்கையில் எவ்வித பிடிப்பும் ஏற்படாததாலும் உறவினர்களின் நாகரிக பழக்கவழக்கங்கள் பிடிக்காததாலும் சுமார் 650 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே பயணம் செய்து சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் தெய்வநாயகப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவரும் பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் குடிபெயர்ந்தனர். இருப்பினும், பாண்டியன் மட்டும் சென்னை வாழ்க்கை பிடிக்காமல் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் சென்னையிலுள்ள தனது பேரனுக்கு உடல்நிலை சரியில்லாததால் கேரளாவிலிருந்து பேருந்து மூலம் சென்னைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற சில நாள்களிலேயே கரோனோ பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பேரனைப் பார்த்துவிட்டு ஓரிரு நாட்களில் ஊர் திரும்பி விடலாம் என்று எண்ணி சென்னை சென்ற பாண்டியனுக்கு இந்த ஊரடங்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், வேறுவழியில்லாததால் பல்லைக் கடித்துக்கொண்டு நகரத்து வாழ்க்கையை நகர்த்தியுள்ளார்.
காலங்கள் மாறியதே தவிர காட்சிகள் மாறவில்லை. கரோனா தொற்றின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்ததால், ஊரடங்கு தொடர்ந்தது. நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் சொந்த ஊர் திரும்பிவிடலாம் என்று பார்த்தால் பேருந்துகளும் ஓடவில்லை. இதற்கு மேல் தன்னால் ஒரு நொடிகூட சென்னையில் இருக்க முடியாது என்பது பாண்டியனுக்கு தெளிவாகப் புரிந்தது. இதனால் ஊருக்குத் திரும்ப என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். பேருந்துகளுக்கு வழியில்லை. சரி, பேரன் வீட்டிலிருக்கும் சைக்கிலேயே புறப்பட்டுவிடலாம் என்று முடிவெடுத்தார்.
வீட்டில் சொன்னால் தன்னை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால், யாரிடமும் சொல்லாமல், கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி, தனது பேரனின் சைக்கிளுடன் திருநெல்வேலி மாவட்டம் தெய்வநாயகப்பேரியை நோக்கி தனது பெரும் பயணத்தைத் தொடங்கினார். பகலில் சைக்கிள் ஓட்டிவிட்டு, இரவில் சாலையின் ஓரம் ஓய்வெடுத்தார். சுமார் 650 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் ஐந்தே நாள்களில் சைக்கிளில் கடந்து ஜுன் 29ஆம் தேதி வெற்றிகரமாக பாண்டியன் தனது சொந்த ஊருக்கு வந்துசேர்ந்தார்.
சென்னையில் கரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால், தன்னால் கிராமத்தில் வேறு யாருக்கும் கரோனா பரவிவிடக் கூடாது என்பதில் பாண்டியன் கவனமாக இருந்துள்ளார். இதனால், ஊருக்கு வெளியே இருக்கும் தனது குலதெய்வமான சுடலைமாடன் கோயிலில் பாண்டியன் தன்னைத் தானே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரது சகோதரர்கள் மூன்று வேளை உணவு கொடுத்து உதவியுள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பாண்டியன் தாத்தா, "சென்னையில் கடந்த 120 நாட்களாக தங்கியிருந்தேன். அங்கு எனக்கு மனது சரியில்லை, இதனால் சொந்த ஊருக்கு வர முடிவு செய்தேன். ஆனால் பஸ் ஓடவில்லை உடனே சைக்கிளை எடுத்துட்டு கிளம்பிவிட்டேன். சென்னையில் இருந்து நேராக திண்டிவனம், விழுப்புரம், திருச்சி வழியாக விராலிமலை சென்றேன். அங்கிருந்து மதுரை வழியாக திருநெல்வேலி வந்தடைந்தேன்.
வரும் வழியில் பலர் எனக்கு உதவி செய்தனர். காவலர்கள் யாரும் எனக்கு தொந்தரவும் கொடுக்கவில்லை. கங்கைகொண்டானில் ஒரு காவலர் என்னிடம் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டார். திருநெல்வேலி செல்கிறேன் என்றவுடன் ஓரமாகப் பார்த்துச் செல்லுங்கள் தாத்தா என்றார்.
கரோனா காலம் என்பதால் ஊருக்கு வந்தவுடன் யாரிடமும் பழகாமல் 15 நாட்கள் கோயிலில் தங்கினேன். மன தைரியம் எனக்கு அதிமாக இருந்தது. அதனால் சைக்கிள் பயணத்தால் எனக்குப் பெரிய அளவில் உடல் சோர்வு ஏற்படவில்லை. ஏற்கனவே, 1988ஆம் ஆண்டு மரக்காணத்தில் வேலை பார்த்தபோது, வேலை பிடிக்காமல் சென்னைக்கு சைக்கிளில் செல்ல முடிவு செய்தேன். அப்போது லாரிக்காரர் ஒருவரிடம் எனது சைக்கிளை ஏற்றி நானும் வரலாமா என்று கேட்டேன். ஆனால் டிரைவர் முடியாது என்று சொல்லிவிட்டார்.
உடனே எனது சைக்கிளை மிதிக்க தொடங்கினேன். சிறிது தூரம் சென்றபின் அந்த டிரைவர் என்னைப் பார்த்து வேண்டுமென்றால் லாரியில் ஏறிக் கொள்ளுங்கள் என்றார். நான் பிடிவாதமாக வேண்டாம் என்றேன். மேலும், நான் உனக்கு முன்பே சென்னைக்கு வந்துவிடுவேன் என்றேன். சொன்னது போலவே செய்தும் காட்டினேன்" என்றார்.
பாண்டியனுக்கு சிறுவயது முதலே மன தைரியம் மிக அதிகம் என்று கூறினார் அவரது உடன் பிறந்த சகோதரர் சுப்பையா. தொடர்ந்து சுப்பையா நம்மிடம் கூறுகையில், "சென்னையில் நகர வாழ்க்கை பிடிக்காமல் அவர் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிட்டார். கரோனா பரவல் காரணமாக கோயிலில் 15 நாள்கள்வரை தங்கினார். அவர் சிறு வயது முதலே மிகவும் தைரியமானவர், திறமையானவர். சென்னையிலிருந்து அவர் சைக்கிளில் வரும்போதுதான் எங்களுக்கு தகவல் கொடுத்தார்" என்று கூறினார்.
பக்கத்து மாவட்டத்துக்கு பைக்கில் செல்லக்கூட சிரமப்படும் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு மத்தியில் சென்னையிலிருந்து 650 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து சொந்த ஊருக்கு வந்த பாண்டியன் தாத்தாவின் மனஉறுதியைக் கண்டு ஊர் பொதுமக்கள் இன்னும் ஆச்சரியத்தில் இருந்து மீளவில்லை. கிராமத்து பழக்கவழக்கமும் கிராமத்து உணவு முறையும் என்றும் வலிமையானது என்பதற்கு பாண்டியன் தாத்தா சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.
இதையும் படிங்க: கரோனா நெருக்கடியில் தலைவிரித்தாடும் வாடகை பிரச்னை: அரங்கேறும் வன்முறைகளுக்கு தீர்வுதான் என்ன?