திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே உள்ள திருப்பணிகரிசல் குளத்தைச் சேர்ந்த சந்தியா (18) என்ற இளம்பெண்ணை காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் நான்கு நாட்களுக்கு முன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்களும், பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து, சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனைக் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
இந்நிலையில், திருப்பணிகரிசல்குளம் ஊர் மக்களும், சந்தியாவின் உறவினர்களும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பணிகரிசல்குளம் கிராமத்தில் கடந்த நான்கு தினங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சந்தியாவின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், கொலை வழக்கை விரைந்து விசாரித்து சிறுவனுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதும் ஊர் மக்களின் கோரிக்கையாக இருந்தது வந்தது.
இதையும் படிங்க: விழுப்புரத்தில் பைனான்சியர் வெட்டி கொலை!
மேலும், மது போன்ற போதை பழக்கத்தால்தான் இது போன்ற கொலைகள் நடைபெறுவதாகவும், மதுவை ஒழிக்க வேண்டும் என்றும் அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர். இந்த போராட்டத்தை கைவிட அரசு தரப்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நிவாரணத் தொகை: உயிரிழந்த சந்தியா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டது. எனவே, அச்சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிவாரணத் தொகையில் முதல் கட்டமாக 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உயிரிழந்த சந்தியாவின் பெற்றோரிடம் அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
மீதம் உள்ள தொகை விரைவில் வழங்கப்படும் என்றும், அரசு வேலை வழங்குவது சட்டத்தில் இடம் பெற்றுள்ள அம்சம் என்பதால், அதை விரைந்து வழங்க அரசிடம் பரிந்துரை செய்கிறோம் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்த சந்தியாவின் உடலைப் பெற்றுக்கொள்ள ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
உடல் அடக்கம்: கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நடந்த போராட்டம் நேற்று முடிவிற்கு வந்துள்ளது. இதையடுத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சந்தியாவின் உடல், நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, சந்தியாவின் சொந்த ஊரான திருப்பணிக்கரிசல் குளம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 4 காவல் துறையினர் கைது!