திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டபேரவைத் தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் 15 பறக்கும் படைகள், 15 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் 24 மணி நேரமும் சுழற்சி அடிப்படையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில் பாளையங்கோட்டை சட்டபேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையிலான குழுவினர் நேற்று (மார்ச் 27) பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது பையைச் சோதனை செய்தபோது உள்ளே ஐந்து லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவரிடம் விசாரித்தபோது, தான் தனியார் நிறுவனங்களிடம் பணம் வசூல்செய்து அதை வங்கியில் செலுத்தும் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், தற்போது வசூல் பணத்தை எடுத்துச் செல்லவதாகவும் தெரிவித்தார்.
ஆனால் பணம் வசூல் செய்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படை அலுவலர்கள் அவரிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாயைப் பறிமுதல்செய்து, பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியரிடம் கணக்கில் வராத 28 லட்சம் ரூபாயை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பாளையங்கோட்டை பகுதியில் ஐந்து லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பறக்கும் படை காவலர்கள் மீது பேருந்து மோதி விபத்து - இருவர் பலி!