திருநெல்வேலி: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழையானது பெய்து வருகிறது. தற்போது தான், மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கனமழையால் தத்தளித்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
அதற்குள்ளாக நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று (டிச 17) முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்த 4 மாவட்டங்களிலும் இன்று (டிச.18) ரயில்கள், பெரும்பாலான இடங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டும், மழைநீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' கொடுத்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ண பேரி கிரமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (டிச 17) காலையில் இருந்து பேய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் கிருஷ்ண பேரி பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவரும் அவர்களது வீட்டிற்குள்ளேயே சிக்கியுள்ளனர்.
இது குறித்து கிருஷ்ண பேரி பகுதியின் அருகில் உள்ள கிரமத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரிச்சந்திரன் என்பவர் கூறியபோது, "நேற்று (டிச 17) முதல் பெய்து வரும் மழையின் காரணமாகக் கிருஷ்ண பேரி பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள 300 வீடுகளில் வசிக்கும் மக்கள் அவரவர் வீடுகளில் சிக்கியுள்ளனர். மேலும், இவர்களுக்கு உண்பதற்கு உணவும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுமட்டும் இல்லாது, வெள்ளநீரில் மூன்று பேர் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது, இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொருவர் எங்குச் சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால், தற்போதுவரை மீட்புப் படையினர் யாரும் இங்கு வரவில்லை. ஹேலிகாப்டர் மூலமாகப் பொதுமக்கள் மீட்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர். மேலும், இப்பகுதி மக்களை மீட்க பணியை விரைந்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வராக நதி மற்றும் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: நீரில் அடித்து செல்லப்பட்ட தென்னை மற்றும் இலவ மரங்கள்!